மக்கள் போராட்டக்கள செயற்பாட்டாளரான டானிஷ் அலி, விளக்கமறியலில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தி கைதான டானிஷ் அலி, மகசின் சிறை அறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதன்படி, அவர் சிறைச்சாலை விசாரணை ஆணையத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் டானிஸ் அலி குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
அதன்படி அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அலி கடந்த மாதம் டுபாய் செல்ல முற்பட்ட போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
நாளை அடையாள அணிவகுப்பில் டானிஸ் அலியை ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சி மூலம் மிரட்டல் விடுத்தது, ஒளிபரப்பு நடவடிக்கைகளை சீர்குலைத்தது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டில் அலி கைது செய்யப்பட்டார்.
31 வயதுடைய குறித்த நபர் குருநாகல் வெபட பிரதேசத்தில் வசிப்பவராவார்.