அடுத்த வாரம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள சீன ஆய்வுக் கப்பல் தொடர்பில் இந்தியா தனது கவலைகளை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘யுவான் வாங் 5’ ஐ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்க அனுமதிக்கும் இலங்கையின் முடிவு குறித்து “உயர் மட்டத்தில்” கவலைகள் எழுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் இந்த கப்பல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி வரை துறைமுகத்தில் தரித்து நிற்கும்.
இந்தியாவால் கவலை எழுப்பப்பட்ட போதிலும், கப்பலுக்குள் நுழைவதைத் தடுக்க இலங்கை இதுவரை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கப்பலின் வருகை அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.
கப்பல் சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்தில் இருந்து ஜூலை 13 அன்று புறப்பட்டு தற்போது 19.0 நொட்ஸ் வேகத்தில் ஹம்பாந்தோட்டை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கப்பல் பயணங்களிற்கான தரவுத்தளம் குறிப்பிடுகிறது.
யுவான் வாங்-வகுப்புக் கப்பல்கள் செயற்கைக்கோள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்காணிப்பதற்கான வசதிகள் உள்ளன.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போது இந்தியாவை உளவு பார்க்க இந்த கப்பல் பயன்படுத்தப்படலாம் என்று இந்தியா கவலை கொண்டுள்ளது.
எனினும், சம்பந்தப்பட்ட தரப்பினர் அதன் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்று நம்புவதாக கடந்த வெள்ளியன்று சீனா கூறியது.