ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (30) கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தோம். எமது கட்சியின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் வந்து எந்தவித குழப்பமும்மின்றி எடுக்கப்பட்ட தீர்மானம். ராஜபக்ஸ குடும்பத்தை அரசியல் இருந்து அகற்ற வேண்டும் என்ற மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. அது உலகத்திலேயே சிறப்பாக நடைபெற்ற வன்முறையற்ற ஒரு ஆர்ப்பாட்டம். அதன் பிரதிபலனாக ராஜபக்ஸ குடும்பம் அரசியிலில் இருந்து ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுறது. ஆனால் உண்மையில் அவர்கள் சற்று ஒதுங்கியிருந்து ரணில் ராஜபக்சவை மன்னிக்க வேண்டும் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்கள்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ அவர்களின் நிகழ்சி நிரலை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துபவர். ராஜபக்ஸ அவர்களின் ஆட்சியின் நீட்சியாக தான் அதனை பார்க்க முடியும். அதனை தடுப்பதாக இருந்தால் டலஸ் அழகப்பெருமவுக்கு தான் வாக்களிக்க முடியும். மாற்று தெரிவு எதுவும் இருக்கவில்லை.
வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவுடன் தமிழ் மக்கள் சந்தித்துள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் ஒப்பந்தம் செய்திருந்தோம். விசேடமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் இணங்கிய 4 விடயங்கள் தொடர்பிலும் உடன்பாடு செய்திருந்தோம். அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணையை ஆரம்பித்தல், நில அபகரிப்பை தடுத்தல், விசேட சட்டங்களின் கீழ் நிலங்கள் அபகரித்தலை தடுத்தல் தொடர்பில் அது சொல்லப்பட்டது. இறுதியாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை காண இது வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது உடன்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் பேசியிருந்தோம். தற்போதைய ஜனாதிபதிக்கு இது தொடர்பில் சொல்லத் தேவையில்லை. அவருக்கு அது எல்லாம் நன்றாக தெரிந்த விடயம். கடந்த ஆட்சி காலததில் இவற்றை நடைமுறைப்படுத்த அவருடன் நாம் சேர்ந்து இயங்கினோம். இதுவெல்லாம் அவருக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது ஜனாதிபதி கதிரையில் இருப்பதால் வேண்டுமென்றால் மீள ஞாபகப்படுத்தலாம்.
தற்போது இலங்கைக்கு நிதி வழங்குவதலில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள் எழ வாய்ப்பே இல்லை. ஆர்ப்பாட்டத்தின் மூலமே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். ஆர்ப்பாட்டம் நடந்திருக்காவிட்டால் இன்று பாராளுமன்றத்தில் தனது கட்சியின் ஒரு தனி எம்.பியாக அமர்திருப்பார். அந்த ஆர்ப்பாட்டத்தை உபயோகித்து ஜனாதிபதியாகிவிட்டு அந்த ஆர்ப்பாட்டகாரர்களை வேட்டையாடுவது மிகவும் மோசமான செயல். இவருக்கு முன்னுக்கு இருந்த கோட்பாய ராஜபக்ஸ கூட செய்யாததை தான் செய்து ஒரு பலசாலியாக தன்னை காட்ட முயல்கிறார். அமைதியான போராட்டக்காரர்களை விரட்டி விரட்டி கைது செய்வது மிகவும் தவறான செயற்பாடு. அதற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். சர்வதேசமும் குரல் கொடுக்கும். இவ்வாறான செயற்பாடு தொடருமாக இருந்தால் நாட்டுக்கு நிதி வருவதை மறந்து விட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் கூட அறிவித்திருந்தது. சீனாவுடன் உடனடியாக பேசுமாறு தெரிவித்துள்ளது. கடன் மீள் உருவாக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுரை கூறியுள்ளது. கடன் மீள் உருவாக்க விடயத்தில் சீனாவுடன் இணக்கப்பாடு முதலில் வர வேண்டும். ஏனைய நாடுகள் ஒரு அமைப்பாக இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு சீனாவும் உடன்பட வேண்டும். அதனால் சீனாவுடன் முதலில் பேசுமாறு கூறப்பட்டுள்ளது. இது இலகுவாக நடைபெறுகின்ற விடயமல்ல.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு சம்மந்தனுக்கு அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வர வேண்டுமாக இருந்தால் குறுகிய காலத்திற்கு என்றாலும் சர்வகட்சி ஆட்சி அமைய வேண்டும். இல்லையெனில் அரசியல் ஸ்திரத் தன்மையை பேண முடியாது. அப்படியொரு சர்வகட்சி ஆட்சி வேண்டும் என்பதற்காகத் தான் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு கொடுத்தோம். எதிர்கட்சியில் அமைந்துள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து பொதுஜன பெரமுனவில் உள்ள சிலரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தான் அது சர்வ கட்சியாக இருக்க முடியும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தவர்கள் முழுக்க முழுக்க பொதுஜன பெரமுன கட்சி. அவர்கள் ஒன்றாக செயற்பட்டமையால் சர்வகட்சி ஆட்சியை அமைக்க முடியாமல் போனது. ஆனால் தற்போது ஜனாதிபதியாக வந்த பின் ரணில் விக்கிரமசிங்க ஒரு சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மைதன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும். சிறிலங்காக பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தில் இருக்கின்ற சர்வகட்சியாக இருக்க முடியாது. பொதுஜன பெரமுன மக்கள் ஆணையை இழந்த கட்சி. அதனாலேயே அந்த கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகியிருந்தார்கள் எனத் தெரிவித்தார்.