யாழ்ப்பாணத்தில்,ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட 23 வயது இளைஞன், இருதயத்தில் ஏற்பட்ட கிருமித் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த 23 வயதான இளைஞனே கடந்த செவ்வாய்க்கிழமை (26) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞன் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார். தொடர்ந்து ஊசிமூலம் போதையேற்றி வந்ததால், இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சையின் பின்னர், போதை ஊசியால் இளைஞனுக்கு ஏற்படவுள்ள அபாயத்தை சுட்டிக்காட்டி, அறிவுரை கூறி வைத்தியர்கள் அனுப்பி வைத்திருந்தனர்.
எனினும், கடந்த திங்கட்கிழமை இளைஞன் மீளவும் ஊசி மூலம் ஹெரோயின் போதைப்பொருளை உடலில் செலுத்தியுள்ளார். இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அன்றே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப் பொருளால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுதான் காரணம் என்று வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள்: பாவனையால் யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தில் பதிவான இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.