மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்ன பகுதியில் விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தன்னை தானே கடத்தி காட்டுபகுதியில் கட்டி வைத்ததாகக் கூறி நாடகமாடியுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்
ரிதிதென்னப் பகுதியில் நேற்று காலையில் வீதிச்சோதனையில் ஈடுபட்ட பொலிசார் ரிதிதென்ன பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல்வாடி ஒன்றுக்கு அருகில், உள் ஆடையுடன் ஆண் ஒருவர் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அங்கு சென்ற போது அவர் விமானப்படை வீரர் என தெரியவந்துள்ளது.
அவர் கட்டப்பட்டிருந்த மரத்தில் “முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள்” என சிறிய காகித மட்டையில் வாசகம் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிரு;தது.
பொலிசார் அவரை உடனடியாக மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த விமானப்படை வீரரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றும் வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ரத்தினசூரிய முதியன்சலாகே என்ற விமானப்படை வீரர் எனவும், அவர் படை முகாமில் இருந்து விடுமுறைக்காக வீடுசென்றவர் என்றும், நேற்று முன்தினம் புதன்கிழமை (27) காலை ஹட்டன் பஸ்நிலையத்தில் இருந்து மகியங்கனைக்கு செல்லும் பஸ்வண்டியில் பயணித்து மாலை 3.15 மகியங்கனைக்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து பொலன்னறுவை பஸ் வண்டியில் பயணித்து மாலை 6.30 மணிக்கு செவினப்பிட்டி மட்டக்களப்பு சந்தியை சென்றடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு செல்வதற்காக செவினப்பிட்டி சந்தியில் காத்திருந்தபோது மனைவியுடன் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது பின்னால் தனியார் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாதோரால் தலையில் தாக்கப்பட்டு, தனது முகத்தை மூடிதாகவும், பின்னர் தன்னை அந்த வாகனத்தில் ஏற்றிகொண்டு சுமார் 2 மணித்தியால பயணத்தின் பின்னர் ரிதிதென்ன பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்து சுமார் 500 மீற்றர் பிரதான வீதியிலுள்ள செங்கல் வாடி ஒன்றுக்கு அருகில் தனது ஆடைகளை களைந்து உள் ஆடையடன் கால்களையும், கைகளையும் கயிற்றால் கட்டி மரத்துடன் கட்டப்பட்டதுடன் அந்த மரத்தில் முரட்டு அரசியலுக்காக உதவும் கைக்கூலிகள் இப்படித்தான் கொல்லப்படுகின்றார்கள் என எழுதி தொங்கவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி சென்று சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டார். அப்போதும் விமானபடை வீரர் தனக்கு நடந்தது மேற்படி சம்பவம்தான் என தெரிவித்துள்ளார்.
எனினும் விமானப்படை வீரருக்கு எதுவிதமான அடிகாயங்களும் இல்லாததையடுத்து அவர் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினையடுத்து மீண்டும் மேற்கொண்ட விசாரணையில் அவர் கையடக்க தொலைபேசி பப்ஜி கேமில் அதிக பணத்தை இழந்துள்ளதாகவும், முகாமில் சக படைவீரர்களிடம் கடனாக பணம் வாங்கி அந்த பப்ஜி கேமில் பணம் செலுத்தி கடனாளியாகியுள்ளதும் தெரிய வந்தது.
எனவே இதற்கு தீர்வு காண்பதற்காக தான், கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்துள்ளார்.
செவினப்பிட்டி கடை ஒன்றில் பிரிஸ்டல் போட் அட்டை மற்றும் மாக்கர் வாங்கதுடன், வேறு கடையில் கயிறு ஒன்றையும் வாங்கி கொண்டு ரிதிதென்னை பொலிஸ் சோதனைச்சாவடியை தாண்டி மட்டக்களப்பு பிரதான வீதியில் இறங்கி வீதியில் சனநடமாட்டம் அற்ற குறித்த பகுதிக்கு சென்று பிரிஸ்டல் போட்டில் குறித்த வாசகத்தை எழுதி தொங்கவிட்டுவிட்டு, பின்னர் உடைகளை கழற்றிவிட்டு உள் ஆடையுடன் தன்னைதானே கயிற்றால் கட்டி கொண்டு இந்த நாடகமாடியுள்ளார் என தெரிவித்தார்.
அவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.