அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜீ.எல்.பீரிஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது தலைவர் தாம் என்றும், கட்சியை உருவாக்கும் வரையிலான அனைத்து கலந்துரையாடல்களிலும் நேரடியாக ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இத்தருணத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும், நாட்டின் அரசியலமைப்பிற்கும் எதிரானது என்பதை தாம் நன்கு அறிவதாக கூறினார்.
பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பான போதிய ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவசரகால சட்டம் தேவையற்றது என்றும் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற வழி வகுக்கும் என கூறினார்.
அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அது இலங்கைக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், அது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இழக்கவும் வழிவகுக்கும் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
எனவே தான் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக வாக்களித்ததாக அவர் கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது, அரசாங்கத்தின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறை மற்றுமொரு தவறைச் செய்து திருத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிந்தது.
சில விடயங்களை அரசாங்கம் மற்றும் எதிர்ப்பாளர்களிடம் இருந்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடலை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியாக கடமைப்பட்டிருப்பதாகவும், எதிர்ப்பாளர்கள் பொறுப்புடனும், ஒழுக்கத்துடனும், பொதுச் சொத்துக்களுக்கு மதிப்பளித்து, பொது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
தற்போதுள்ள சூழ்நிலையை சாதகமாக்குவதைத் தவிர்க்குமாறு இரு தரப்பினரையும் வலியுறுத்தினார்.