தற்போதைய ஊழல் ஆட்சியாளர்களிற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் இறுதி யுத்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த பொது ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் முழு மக்களையும் பங்குபற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இறுதிப்போராட்டத்தின் ஊடாக ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்காக மக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்குவோரை உறுதிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் அழைப்பு விடுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைய தலைமுறையினர் தமது சொந்த பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மீதான அடக்குமுறையை மன்னிக்க முடியாது என்று கூறிய எம்.பி, மக்கள் போராட்டம் 22 மில்லியன் மக்களால் உருவாகிறது என்றும் கூறினார்.
தற்போதைய பாராளுமன்றமும் அதன் கலாசாரமும் ஊழல்மயமானது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஓரிரு தலைவர்களை நீக்குவது இந்த அமைப்பை தூய்மைப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது என்பதை போராட்டத்தின் இளைஞர் பகுதியினர் புரிந்து கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
எல்லா நேரங்களிலும் அடக்குமுறைக்கு எதிராக நிற்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார், மேலும் வெளிநாட்டவர்கள் மற்றும் சர்வதேச சமூகம் நாட்டுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
பொருளாதார தடைகளை தாங்கள் தாங்குவதாக எம்பி பொன்சேகா தெரிவித்துள்ளார்.