ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
2288/30 என்ற விசேட வர்த்தமானி மூலம் ஜூலை 17ஆம் திகதி அப்போதைய பதில் ஜனாதிபதியினால் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் போது, அவசர நிலை பிரகடனம் மீதான விவாதம் நடைபெறும்.
பிரகடனத்தின் மீதான விவாதம் மாலை 4.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பிற்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 14 நாட்களுக்குள் இந்த அறிவிப்புக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால், அது ரத்து செய்யப்படும்.
பொது பாதுகாப்பு மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பராமரிப்பு பொருட்கள் மற்றும் சேவைகளை உறுதி செய்வதற்காக பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வாக்கெடுப்பில் ராஜபக்ஷ ஆதரவு தரப்பினர் அவசரகால சட்டத்தை ஆதரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய தரப்பினர் எதிர்ப்பர். அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு சிவில், சமய தலைவர்கள் பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், அரசு அதனை கண்டுகொள்ளாமல், எதிர்ப்பாளர்களை அடக்க, அவசரகால சட்டத்தை அமுல்ப்படுத்துவதாக குற்றச்சாட்டு உண்டு.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிடமான தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் அமைச்சர் அபேவர்தன நியமிடக்கப்படவுள்ளார். அவர் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வார்.
அவர் 1994 முதல் 2010 வரை மற்றும் 2015 மற்றும் 2020 க்கு இடையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வஜிர அபேவர்தன உள்நாட்டலுவல்கள் அமைச்சராக செயற்பட்டார்.