காதல் திருமணம் செய்த மகளையும், மகளின் காதல் கணவனையும் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்..
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மா. 20 வயதான இவர் கோவில்பட்டி கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ரேஸ்மாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த உறவுக்கார இளைஞர் மாணிக்கராஜ் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து திரும்பி பணம் நிறைய இருந்த போது இவர்களுக்குள் மலர்ந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அண்மைகாலமாக வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றி வந்த மாணிக்கராஜ், கடன் வாங்கி மது குடிக்கும் நிலைக்கு வந்ததால் ரேஸ்மாவின் பெற்றோர் அவனை மறந்துவிட கூறி உள்ளனர். ஆனால் மாணிக்கராஜ் மீது கொண்ட காதலை மறக்க இயலாமல் தவித்துள்ளார் ரேஸ்மா.
இந்த நிலையில் ரேஸ்மாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடத்த தேதி குறிக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரேஸ்மாவை வீட்டில் இருந்து அழைத்துச்சென்ற மாணிக்கராஜ், திருமங்கலம் அருகே பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நிச்சயதார்த்தம் நின்று போனதால் ரேஸ்மாவின் தாயும், தந்தையும் கடுமையான அவமானத்தை சந்தித்ததாக கூறப்படுகின்றது. இதற்கு காரணமான இருவரையும் வெட்டி கொலை செய்யப்போவதாக ஆவேசமாக கூறி வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் ரேஸ்மாவின் தந்தை முத்துக்குட்டியை எச்சரித்து அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் ஊருக்குள் வந்த தகவல் தெரிந்ததும், மீண்டும் முத்துக்குட்டி பிரச்சனை செய்துள்ளார்.
இதையடுத்து ஊர் பஞ்சாயத்து கூடிபேசி முத்துக்குட்டியை எச்சரித்ததோடு, காதல் தம்பதியை தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் முத்துக்குட்டி துணிமணிகளை எடுத்துக் கொண்டு தனது மனைவியை வெளியூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் வீட்டை பூட்டிவிட்டு கையில் அரிவாளுடன் மாணிக்கராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார் அவரது வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் நூறு நாள் வேலைக்கு சென்று விட்டதால் வீட்டில் புதுமண தம்பதியர் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்த வேகத்தில் கட்டிலில் படுத்திருந்த மாணிக்கராஜையும், தனது மகள் என்றும் பாராமல் ரேஸ்மாவையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு முத்துக்குட்டி தப்பிச்சென்றதாக சம்பவத்தை பார்த்த அக்கப்பக்கத்து வீட்டார் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரது உடல்களையும் மீட்டு பிணக்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய முத்துக்குட்டியைத் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பார்வையிட்டார். விசாரணையில் மாணிக்கராஜ் வசதியுடன் இருந்த போது காதலிக்க அனுமதித்த பெற்றோர், அவன் கடனாளியாகி மதுவுக்கு அடிமையானதால் , மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருமணத்துக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து , அந்த திருமணம் நடக்காமல் போன ஆத்திரத்தில் இந்த கொடூர கொலையை செய்தது தெரியவந்துள்ளது.தலைமறைவான முத்துக்குட்டியையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.