ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகியதை தொடர்ந்து புதிய ஜனதிபதி தெரிவு, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவு செய்யும் நடைமுறை குறித்து, நாடாளுமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த விபரம் வருமாறு-
அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு பாராளுமன்றத்தினால் அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதன்போது இந்தத் தெரிவு 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைப் பின்பற்றியதாக அமைந்திருக்கும்.
விசேடமாக இந்த நடைமுறை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார். அத்துடன் இந்த நடைமுகைளுக்காக பாராளுமன்றம் மூன்று நாட்கள் கூடும்.
அதன்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
● இதில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதிக்குப் பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் இந்தத் தெரிவு நடாத்தப்படுதல் வேண்டும்.
● இதற்கமைய இந்த வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாகப் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைப்பதாகச் செயற்படுதல் வேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கு என நிர்ணயிக்கப்படும் திகதியையும், நேரத்தையும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
● அவ்வாறு பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். இதற்கமைய நியமனங்கள் அவரால் பெற்றுக்கொள்ளப்படுவதற்கான திகதியையும் நேரத்தையும் அவர் நிர்ணயிப்பதுடன், கூட்டத் திகதியிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு முந்தாததும், ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான ஒரு திகதியாக அது இருக்க வேண்டும்.
● நியமனங்கள் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியன்று பாராளுமன்றம் கூடவேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார். ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார் எனக் கூறும் எழுத்திலான சம்மதத்தை அத்தகைய உறுப்பினரிடமிருந்து முன்னர் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு சம்மதத்தைத் தெரிவித்த உறுப்பினர்கள் அன்றையதினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்க வேண்டும்.
● இங்கு ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் அவர் அந்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறு முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியும், நேரமும் பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட வேண்டும், அத்தகைய திகதி நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக இருக்க வேண்டும்.
● வாக்கெடுப்பை நடத்துவதற்கென நிர்யணிக்கப்பட்ட திகதியன்று செயலாளர் நாயகமே தெரிவத்தாட்சி அலுவராகச் செயற்படுவதுடன், வாக்களிப்புத் தொடங்குவதற்கு முன்னர் வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை உறுப்பினர்களுக்குக் காண்பித்து அவர்கள் முன்னிலையில் இலச்சினையிடல் வேண்டும். இதற்கமைய வாக்களிப்புத் தொடங்கியவுடன் தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்படும் போது உறுப்பினர்கள் தெரிவத்தாட்சி அலுவலரின் மேசைக்குச் சென்று வாக்குச்சீட்டொன்றைப் பெற்று தமது வாக்குகளை அடையாளமிட வேண்டும். அதன் பின்னர் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
● உறுப்பினர் ஒருவர் வாக்குச்சீட்டொன்றினை தற்செயலாகப் பழுதாக்கினால், அதனை அவர் தெரிவத்தாட்சி அலுவலரிடம் திருப்பிக் கொடுத்து, தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய தற்செயல் பற்றித் திருப்தியுற்றால் அவருக்கு வேறொரு வாக்குச்சீட்டைக் கொடுக்கலாம். பழுதாக்கப்பட்ட வாக்குச்சீட்டு தெரிவத்தாட்சி அலுவலரால் உடனடியாக இல்லாததாக்கப்படும். பெயர் கூப்பிடப்பட்டபோது வாக்களிக்காதிருந்த எவரேனும் உறுப்பினரின் பெயரை இரண்டாவது முறையாக அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்ட பின்னரும் வாக்களிக்காதிருந்தால் அவர் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தவராகக் கருதப்படுவார்.
● ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உரித்துடையதாக இருக்கும் என்பதுடன், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் ‘1’ எனும் எண்ணை இடுதல் வேண்டும். பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும். இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் 2,3,எனும் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.
● இவ்வாறு வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்படும். எவரேனும் வேட்பாளர் வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் சமுகமளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது அவரது பிரதிநிதியாகச் சமுகமளிப்பதற்கு வேறொரு உறுப்பினரை நியமிக்கவும் முடியும்.
● அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் அரைவாசிக்குக் கூடுதலான வாக்குகளைப் ஒரு வேட்பாளர் பெற்றுள்ளவிடத்து தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
● அதேநேரம், வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறாதவிடத்து இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவுகள் சரிபார்க்கப்படும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது விருப்பத் தெரிவு எண்ணப்படும்.
● வாக்கு எண்ணுகையின் முடிவில் வேட்பாளர் எவருமே செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றில்லாதவிடத்து அந்த எண்ணுகையின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.
● அத்துடன், இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் திருவுளச்சீட்டு போடப்படும்.