திருமணத்தின் பின்னர் எப்படி நடந்து கொள்வது, என்னென்ன செய்வது என்ற ஒப்பந்தத்தில், மணமேடையிலேயே கையெழுத்திட்டுள்ளது ஜோடியொன்று.
அசாம், குவஹாத்தியில் உள்ள பல்தான் பஜாரைச் சேர்ந்த சாந்தி பிரசாத், மின்டு ராய் ஜோடியே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் அனைத்து மோதல்களையும் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
எப்பொழுதும் வீட்டில் தயாரிக்கும் உணவை உண்ண வேண்டும், மாதத்தில் ஒரு முறை பீட்சா உண்ணலாம், ஒவ்வொரு நாளும் சேலை அணிய வேண்டும், இரவு நேர விருந்துகளில் கணவன் பங்கேற்கலாம், ஆனால் மனைவியுடனே செல்ல வேண்டும், கணவன் வாரத்தில் ஒரு நாள் சமைக்க வேண்டும், ஞாயிறு காலையில் என்ன உணவு, ஒவ்வொரு பார்ட்டியிலும் நல்ல படங்களை எடுப்பது மற்றும் 15 நாட்களுக்கு ஒருமுறை ஷொப்பிங் செல்வது, தினமும் ஜிம் செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த ஜோடி திருமணம் செய்யும் போது, இப்படியான ஒப்பந்தம் எதையும் தயாரித்திருக்கவில்லை.
எனினும், திருமணத்தின் போது, நண்பர்கள் ஒரு சிறப்பு பரிசை அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
“நண்பர்கள் இந்த ஒப்பந்தத்தை திருமண பரிசாக கொண்டு வந்தனர். அவர்கள் ஒரு தனித்துவமான பரிசு பற்றி குறிப்பிட்டுள்ளனர் ஆனால் அது என்னவென்று எங்களுக்கு முற்றிலும் தெரியாது. அதில் இருவரும் கையெழுத்திட்டோம். நான் பீட்சாவை விரும்புகிறேன் ஆனால் நான் டயட்டில் இருப்பதால், இது ஒரு மாதத்திற்கு ஒரு பீட்சா. அதேபோல மின்டு தினமும் ஜிம் செய்வார். வாரம் ஒருமுறை மிண்டு சமைக்கலாம். தினமும் புடவை அணிவதற்கு நான் தயங்கினேன் ஆனால் மின்டு மற்ற விடயங்களை ஒப்புக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன்” என்றார் சாந்தி.
தனது பட்டப்படிப்பை முடித்து, பயிற்சி மையத்தில் பணிபுரியும் சாந்தி, இப்போது தனது புதிய வீட்டையும் குடும்பத்தையும் குறைந்தபட்சம் சில வருடங்களாவது கவனித்துக் கொள்ள விரும்புகிறார். “எங்கள் குடும்பம் ஒப்பந்தத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.



