முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சில நாட்களாக சளி பிரச்சினைஇருந்து வந்துள்ளது. இதனால், நேற்றுகாலை கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். மாலையில் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனைக்கு சென்றார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனைசெய்தனர். பின்னர், மருத்துவர்களின்ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதரவாளர்கள் யாரும் நேரில் வரவேண்டாம். செல்போனில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.
அமைச்சர் நாசருக்கு தொற்று
தமிழக பால்வளத் துறை அமைச்சர்சா.மு.நாசருக்கு உடல் சோர்வு இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் தொற்று உறுதியானது.
இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.