ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) பதவிவிலகவுள்ளார். இராஜினாமா கடிதத்தில் அவர் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், இன்று உத்தியோகபூர்வமாக பதவிவிலகல் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.
சபாநாயகர் அதனை நாட்டு மக்களிற்கு அறிவிப்பார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார். எனினும், அவர் பதவியேற்ற பின் கடைப்பிடித்த பொருளாதார கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் நாடு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது.
சில வர்த்தகர்கள் அனுகூலம் பெறும் விதத்தில் சீனி உள்ளிட்ட சில பொருட்களிற்கு வரிவிலக்களித்தார். வரி விலக்கினால் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்தது. எனினும், அதை சரி செய்யும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்று கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும்படி பல தரப்பும் வலிறுத்திய போதும், பொருத்தமற்றவர்களை முக்கிய பதவிகளில் நியமித்திருந்த கோட்டாபய, அவர்களின் தவறான ஆலோசனையின் பேரில், எகத்தாளமாக நடந்து கொண்டிருந்தார்.
இதன் விளைவாக ராஜபக்ஷ குடும்பமே பொதுமக்களை முகம் கொடுக்க முடியாமல் தலைமறைவாக வேண்டிய நிலையேற்பட்டது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க சார்பில் வெற்றியீட்டவில்லை. ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது. அந்த ஆசனத்திற்காக ரணில் விக்கிரமசிங்க பெயரிடப்பட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவிவிலகுவதைடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார்.
மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, மக்களாலேயே விரட்டப்பட, மக்களால் நிராக்கப்பட்ட ஒருவர், அரசியல் காய் நகர்த்தல்களின் மூலம் ஜனாதிபதியாகும் நிகழ்வு இலங்கையில் பதிவாகும்.
வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும். இதன்போது ஜனாதிபதியின் பதவிவிலகலை சபாநாயகர் அறிவிப்பார்.
அதன் பின் புதிய ஜனாதிபதிக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்படும். 20ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடைபெறும்.