மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை முதல் மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப் பட்டனர்.
அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது பேருந்துகள் ஊடாக வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-இதனால் மக்களுக்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதோடு, அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார் பேருந்துகளை வீதியின் இடை நடுவில் நிறுத்தியமைக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, குறித்த தனியார் பேரூந்துளை அவ்விடத்தில் இருந்து அகற்றி அரச போக்குவரத்துச் சேவையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
-எனினும் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் சுமுகமான போக்கு வரத்துச் சேவையை முன்னெடுத்த நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் கொதிப்படைந்த நிலையில் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் வீதியை மறித்து தரித்து நின்ற தனியார் பேருந்துகளை அகற்ற முயற்சி செய்தனர்.
-பின்னர் மக்கள் குறித்த பேருந்துகளை அவ்விடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.பின்னர் குறித்த தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் குறித்த பேருந்துகளை அவ்விடத்தில் இருந்து எடுத்துச் சென்றனர்.
அதனை தொடர்ந்து நீண்ட நேரத்தின் பின் அரச போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம் பெற்றது.
எனினும் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் பொது மக்களை பாதிக்காத வகையில் முன்னெடுத்திருக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் டிப்போவுக்கு வழங்கப்பட்ட டீசலில் மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்க பேருந்துகளுக்கும் வழங்குமாறு உரிய தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அண்மையில் வழங்கப்பட்ட டீசலில் தற்போது வரை 2413 லீற்றர் டீசல் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கு வழங்கப்பட்டது.எனினும் அதனை தொடர்ந்து டீசல் எவையும் தனியார் பேருந்துகளுக்கு வழங்கவில்லை.
தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் மன்னார் டிப்போ அதிகாரிகளிடம் டீசல் கோரிய போதும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி காலை தனியார் பேருந்துகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதோடு அரச போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாத வகையில் தனியார் பேருந்துகளினால் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தமக்கான எரிபொருளையும் வழங்க கோரிக்கை விடுத்தனர்.
இதனால் போக்குவரத்துச் சேவைகள் சிறிது நேரம் முழுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர் ,இராணுவம் ,பொலிஸ் உயர் அதிகாரிகள், கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கை போக்குவரத்து சபையின் எண்ணைக் குதங்களில் இருந்து தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு டீசல் வழங்குவது என்ற அரச நிலைப்பாட்டிற்கு அமைய மன்னார் சாலைக்கு 6600 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் அவற்றில் 2500 லீற்றர் டீசலையும்இ13இ200 லீற்றர் டீசல் வருமாக இருந்தால் 5000 லிட்டர் டீசல் தனியார் பேருந்து சேவை பேருந்துகளுக்கு வழங்குவது என குறித்த கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பேருந்து சங்க உரிமையாளர்கள் முன்னெடுத்த பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
நேற்றைய தினம் (11) கிடைக்க பெற்ற எரிபொருள் தனியார் பேருந்து சங்கத்தினருக்கு பகிர்ந்து வழங்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் அவர்கள் வினவிய போதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை.
இந்த நிலை இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை முதல் தனியார் போக்குவரத்துச் சங்கத்தினர் போக்குவரத்து சேவையை இடை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(12) காலை முதல் வீதி மறிப்பு உட்பட பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் மன்னார் பஸார் பகுதியில் சம்பவம் இடம் பெற்ற போதும் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இடம்பெற்ற பிரச்சினைகளை வேடிக்கை பார்த்ததோடு,தடுக்க முயற்சிகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.