யாழ்ப்பாணம் – கிளிநொச்சி விசேட புகையிரத சேவை இன்று ஆரம்பமாகியது. இன்று காலை 7.50 மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலைத்தை வந்தடைந்த பிரயாணிகளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் வரவேற்றார்.
உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்களின் போக்குவரத்து இலகுபடுத்தலிற்காக விசேட புகையிரத சேவையை ஆரம்பித்து தருமாறு புகையிரத திணைக்களத்தினரிடம் விடுகக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் சேவையை வரவேற்ற மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில், பல்வேறு முயற்சிகளின் பின்னர் புகையிரத சேவைகள் திணைக்களம் இந்த விசேட சேவையை ஆரம்பித்துள்ளது.
இதனால் அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் நன்மை அடைந்துள்ளனர். இந்த சேவையை பொதுமக்களும் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.
யாழ்ப்பாண அரசாங்க அதிபர் க.மகேசன் புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய தினம், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் உள்ளிட்ட அதிகளவான அரச அதிகாரிகள் பிரயாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சேவையானது தினமும் காலை 6 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், புங்கன்குளம் 6.44, நாவற்குழி 6.50, தனங்கிளப்பு 6.54, சாவகச்சேரி 7.00, சங்கத்தானை 7.03, மீசாலை 7.07, கொடிகாமம் 7.12, மிருசுவில் 7.14, எழுதுமட்டுவாள் 7.21க்கு புறப்பட்டு பளையை 7.30க்கு வந்தடையும். அங்கிருந்து ஆனையிறவு 7.42, பரந்தன் 7.50க்கு வந்தடைந்து கிளிநொச்சிக்கு 7.56க்கு வந்தடையும்.
மீண்டும், காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் இந்தப் புகையிரதம் பளையிலிருந்து 10.31க்கும், கொடிகாமத்திலிருந்து 10.48க்கும், சாவகச்சேரியிலிருந்து 11 மணிக்கும் புறப்பட்டு 11.20க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இந்தப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து 2.39க்கும், சாவகச்சேரியிலிருந்து 2.59க்கும், கொடிகாமத்திலிருந்து 3.11க்கும் புறப்பட்டு, பளையை 3.38க்கும், கிளிநொச்சியை 3.56க்கும் வந்தடைந்து, முறிகண்டியை 4.10க்கு வந்தடையும்.
மீண்டும் முறிகண்டியிலிருந்து 4.40க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் அறிவியல்நகரை 4.46க்கு வந்தடைந்து, கிளிநொச்சியிலிருந்து 5 மணிக்கு புறப்பட்டு, பரந்தனிலிருந்து 5.06க்கும், பளையிலிருந்து 5.30க்கும் புறப்பட்டு 6.44க்கு யாழ்ப்பாணம் வந்தடைந்து 7.20க்கு காங்கேசனை அடையும்.
இடையில், பரந்தனிலிருந்து 5.04க்கும், ஆனையிறவிலிருந்து 5.14க்கும் புகையிரதம் புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.