அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக துணை நடிகை சாந்தினி தேவா கொடுத்த புகாரை அவர் திரும்ப பெற்றுவிட்டதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இவரது பதவி பறிக்கப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் மணிகண்டன் கடந்த 5 வருடங்களாக குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி தேவா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை அளித்த பேட்டியில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பிசினஸ் விஷயமாக என்னை அமைச்சர் மணிகண்டன் சந்திக்க ஆள் விட்டு அனுப்பினார். ஆரம்பத்தில் அதில் நாட்டமில்லாமல் இருந்த நான் அமைச்சரின் நீண்ட முயற்சிக்கு பின்னர் சந்திக்க சென்றேன். அப்போது மலேசியாவில் அந்த பிசினஸை தொடங்கலாம் என்று என்னிடம் அமைச்சர் கூறினார்.
இதனிடையே செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டோம். நாளடைவில் இருவரும் நண்பர்களாக பழ தொடங்கினோம். பின்னர் அமைச்சருக்கு என் மீது இருந்த ஆர்வம் வெளிப்பட்டது. தன்னுடைய மனைவியிடம் பிரச்சினை இருந்து வருவதாக கூறி வேதனை பட்ட அமைச்சர் என்னுடைய அரவணைப்பை எதிர்பார்த்தார். திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.
அவரை நம்பிய நான் தாலி கட்டிகொல்லாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து வந்தேன். அதனால் நான் கர்ப்பம் அடைந்து 3 முறை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டனின் மிரட்டலுக்கு பயந்து கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.
அமைச்சர் பதவியில் இருப்பதால் இப்போதைக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று கூறிய மணிகண்டன் சென்னையில் அவருக்கு தெரிந்த மருத்துவரின் கிளினிக்கிற்கு என்னை அழைத்து சென்று கருக்கலைப்பு செய்தார்.
பின்னர் அமைச்சர் பதவியை அவரிடம் இருந்து பறித்த பின்பு என்னிடம் தகராறு செய்து அடிக்கவும் ஆரம்பித்தார். மேலும், என்னை திருமணம் செய்துகொள்ளவும் மறுத்துவிட்டார். என் உடல் முழுவதும் அவரால் நிறைய காயங்கள் உள்ளன. இது தொடர்பாக நான் புகார் அளித்தாலோ அல்லது இதுபற்றி கேள்வி கேட்டாலோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது மோசடி வழக்கு தாக்கல் செய்வதாக மிரட்டியது மட்டும் இல்லாமல் ரவுடி கும்பல் வைத்து கொலை செய்து விடுவதாகவும் கூறுகிறார். ஆகையால், அவர் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளேன்” என சாந்தினி தேவா கூறியிருந்தார்.
நீதிபதி கண்டனம்
அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனிடையே, மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் மனு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி சார்பில் மணிகண்டன் மீதான புகாரை திரும்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, ”தன் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும்?” என கண்டனம் தெரிவித்து மணிகண்டன் மீது சாந்தினி தேவா தொடுத்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.