திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (10) மாலை இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்த திருகோணமலை- அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய திருநாவுக்கரசு சுசிகரன் (40) எனவும் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 33 வயதுடையவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா பகுதியில் இருந்து திருக்கோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்து கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
–ரவ்பீக் பாயிஸ் –