அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவைக் கூட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 11 ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட கடந்த ஜூன் 23 ஆம் தேதியே முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட தடையில்லை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஒருவேளை பொதுக்குழு கூட்டத்தில் விதிமுறை மீறல் இருந்தால் அதன்பின்னர் ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், ஓபிஎஸ்தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறினார். பின்னர், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர், ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடி, ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கும் என அறிவித்தார்.
இந்நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து வானகரத்தில் வழக்கம்போல் பொதுக்குழு நடைபெறும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி வானகரத்துக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்குழுவுக்கு முன்னதாக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
வானகரத்தில் இபிஎஸ் உள்ளிட்டோர் அமர்ந்திருக்க மண்டபத்தின் வெளியே தீர்ப்பை வரவேற்று தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.