சுபநாளுக்காக காத்திருக்காமல் ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக இராஜினாமா கடிதங்களை கையளித்து பதவிவிலகிச் செல்ல வேண்டுமென காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டு மக்கள் வெளியேறச் சொன்ன பிறகும் சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இராஜினாமா செய்யாமல் ஏதேனும் வகையில் இன்னும் ஒரு நாள் ஆட்சியில் இருக்க முயன்றால் அதற்கு இடமளிக்க முடியாது. பதவிவிலகிச் செல்லும் வரை மக்கள் கைப்பற்றிள்ள ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகையும், ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற முடியாது என காலி முகத்திடல் போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அமைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருவரும் வெளியேறியதன் பின்னர், அனைத்துக் கட்சிக்கட்சிகளையும் உள்ளடக்கிய ஆட்சியல்ல, போராட்டக்காரர்களும் இணைந்த அரசே உருவாக்கப்பட வேண்டும். அது, மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய இடைக்கால நிர்வாகமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை கட்டியெழுப்ப முயற்சித்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம் என முதலிகே தெரிவித்தார்.
“நாங்கள் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை” என்று அவர் கூறினார்.
காலி முகத்துவாரம் கோட்டா கோ கிராமத்தில் உள்ள அரங்கில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.