பொதுவான ஒருவரை அடுத்த ஜனாதிபதிக்கு பெயரிட்டு, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் சமர்ப்பிபதென ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சிகள் மற்றும் எதிரணியிலுள்ள கட்சிகளிற்கிடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
இன்று காலை 10 மணிக்கு கொழும்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அடுத்த ஜனாதிபதியாக பெயரிடக்கூடியவர்கள் பற்றிய பரிந்துரைகள் சிலவும் இன்று முன்வைக்கப்பட்டன.
கரு ஜயசூரிய, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோரின் பெயர்கள் இன்று முன்மொழியப்பட்டன. எனினும், யாருடைய பெயரும் இறுதி செய்யப்படவில்லை.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டால், அதை ஆதரிப்பதில்லையென கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகள் தீர்மானித்தன.
தொடர்ந்து இது குறித்து கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுஜன பெரமுன தரப்பில் ஜனாதிபதியாக டலஸ் அழகப்பெருமவை முன்மொழியும் நகர்வுகள் இடம்பெற்று வருகிறது.