தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ராம் சரணின் மனைவி உபாசனா தான் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாகக் கூறியதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உபாசனா காமினேனி கொனிடேலா தொழில் முனைவராகவும், கொடையாளியாகவும் உள்ளார். இவருக்கும் ராம் சரணுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்கள் தெலுங்கு திரையுலகின் கொண்டாடப்படும் தம்பதியாக உள்ளனர். இந்நிலையில், அண்மையில் இவர் ஆன்மிக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திய நிகழ்வொன்றில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் சத்குருவிடம் ஒரு கேள்வி எழுப்பினார். “எனக்கும் எனது கணவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நான் என் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் மக்கள் எப்போது எனது ஆர்ஆர்ஆர் (RRR) பற்றி கேள்வி எழுப்புகின்றனர். எனது உறவுகள் (relationship) , எனது பிள்ளை பெற்றுக் கொள்ளும் திறன் (reproduce), வாழ்க்கையில் எனது பங்கு (role) ஆகியனவற்றை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். என்னைப் போன்ற நிறைய பெண்களுக்கு இதற்கான விடை தெரிய வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சத்குரு, “நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளப் போவதே இல்லை என்றால், நான் உங்களுக்கு விருது தருகிறேன். உண்மையில் நான் நிறைய இளம் பெண்களுக்கு இந்த விருதை அறிவித்துள்ளேன். குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தால் அதை நான் பாராட்டுவேன்.
இப்போதைக்கு இந்த பூமிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை இதுதான். மனித இனம் ஒன்றும் அழிவின் விளிம்பில் இல்லை. நாம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறோம். அடுத்த 30 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 10 பில்லியன் ஆகிவிடும்.
இப்போது மனிதர்கள் புவி வெப்பமயமாதல் பற்றிய அச்சத்தில் உள்ளனர். மனிதர்கள் எண்ணிக்கை குறைந்தால் அதைப் பற்றிக் கவலை கொள்ள தேவையிருக்காது. ஆகையால் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத பெண்களை வரவேற்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த பதிலைக் கேட்ட உபாசானா, விரைவில் உங்களிடம் எனது தாயையும், மாமியாரையும் பேச வைக்கிறேன் என்று கூறினார்.
கடந்த ஆண்டு ராம் சரண் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், “சிரஞ்சீவி என்ற மெகா ஸ்டாரின் வாரிசாக திரை ரசிகர்களை மகிழ்விக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் இப்போது குழந்தை பெற்றுக் கொண்டால் எனது இலக்கிலிருந்து விலக வேண்டியிருக்கும். உபாசனாவுக்கும் சில இலக்குகள் இருக்கின்றன. ஆகையால் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை” என்று கூறியிருந்தார்.