நாட்டிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.
நேற்றைய பாராளுமன்ற அமர்வின் பின்னர் இந்த கலந்துரையாடல் நடந்தது.
இதன்படி, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் ஆலோசகர்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் செயற்படவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பல சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
எனினும், ஜே.வி.பி இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை
பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், ரஞ்சித் மத்தும பண்டார, ராஜித சேனாரத்ன, திஸ்ஸ அத்தநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பி திகாம்பரம், டிலான் பெரேரா, கலாநிதி சரித ஹேரத், தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, மொஹமட், முஸம்மில், கெவிந்து குமாரதுங்க, அத்துரலியே ரத்தின தேரர், அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு 113 பெரும்பான்மையை பெறுவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
இது எதன் மூலம் நடைபெறும் என்பது எதிர்காலத்தில் தெரியப்படுத்தப்படும் என்றார். எவ்வாறாயினும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஒரு முடிவுக்கு வரவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க, 113 பெரும்பான்மையைப் பெற முடிந்தால் ஜனாதிபதி அதற்கு இணங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு பரந்த தேசிய வேலைத்திட்டம் அவசியமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தீர்வுகாண முடியாது எனவும் தெரிவித்தார்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் மூலம் நாடு புத்துயிர் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஸ்திரத்தன்மை அறிமுகப்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.