வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று (05) மாலை 9 நபர்களை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த நடவடிக்கைக்கு பயன்படுத்திய ஸ்கானர் இயந்திரம் மற்றும் வான் ஆகியவற்றினையும் கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பலர் நிற்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர். அதன் போது புதையல் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 9 நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், போக்குவரத்திற்கு பயன்படுத்திய வான் மற்றும் புதையல் தேடும் ஸ்கானர் இயந்திரம் ஆகியவற்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாகர் இலுப்பைக்குளம் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய நபர், மூன்றுமுறிப்பு பகுதியினை சேர்ந்த 50 வயதுடைய நபர், மகர பகுதியினை சேர்ந்த 19, 31, 37, 35, 46, 49, 38 ஆகிய வயதுகளையுடைய 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மற்றும் ஸ்கானர் இயந்திரம், வாகனம் ஆகியவற்றினையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.