எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பஸ் சேவைகள் இன்று (4) முதல் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையினால் தனியார் பஸ்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசாங்கம் முன்னரே தெரிவித்திருந்ததாக தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பிராந்திய டிப்போக்கள் தனியார் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிராகரித்து கட்டுப்படுத்துவதாக தெரிவித்தார்.
பேருந்துகள் மட்டுமே பொதுமக்களின் மாற்றுப் போக்குவரத்து முறையாகும் என்றும், போக்குவரத்து வசதியின்றி ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தனியார் பேருந்துகளும் எரிபொருள் வரிசையில் நிற்கின்றன. இன்று 1,000 பேருந்துகள் கூட இயங்காது என்றார்.
எனினும், இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறுகிறது.
இதேவேளை, அனைத்து ரயில்களையும் இயக்குவதற்கு போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், புகையிரத ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களில் கடமைக்குச் செல்வதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகள் மேலும் தடைபடலாம் என நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.