மன்னார் மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று ஞாயிற்றுக்கிழமை (3) மாலை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதற்கு அமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி (05-07-2022) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச செயலகங்கள் ஊடாக வாகனங்களுக்கு என வழங்கப்படும் எரிபொருள் அட்டையின் அடிப்படையில் பெட்ரோல் விநியோகிக்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலகங்களில் உள்ள கிராம அலுவலர்கள் பிரிவுகளை இணைத்து வாகனங்களுக்கு ஒரு நாள் என வழங்கப்படும்.ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கான நேரமும் முதல் நாள் அறிவிக்கப்படும்.
அத்துடன் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு விஷேடமாக வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தின் போது சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்படும் அட்டையுடன் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையையும் கொண்டு வருதல் அவசியம்.இது மன்னார் மாவட்ட உத்தியோகத்திற்கு மட்டுமே பொருந்தும்.
தற்போது மாவட்டத்தில் இரண்டு ஐ.ஓ.சி(I.O.C) எரிபொருள் நிரப்பும் நிலையத்தினால் வழங்கப்பட்டாலும் எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் ஏனைய எரிபொருள் நிலையங்களுக்கும் கிடைக்கப் பெற்றால் கிராமங்களுக்கு அருகில் உள்ள நிலையங்களில் வழங்க கூடியதாக இருக்கும்.
மாந்தை மேற்கு பிரதேசத்தில் எரிபொருள் நிலையம் இல்லாமையால் அருகிலுள்ள நிலையத்தினூடாக வழங்கப்படும்.
இதேபோன்று முசலி மற்றும் மடு பிரதேச வாகனங்களுக்கும் அண்மைய நிலையங்களில் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் மேலும் தெரிவித்தார்.