இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தையடுத்து, 4 மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுக நிலையை எட்டியுள்ளது.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது.
கடமைக்கு சமூகமளிப்பதற்கு தமக்கு பெற்றோல் வழங்கப்பட வேண்டும், அரச ஊழியர்களிற்கு வழங்கப்படும் ஏற்பாட்டின் படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று எரிபொருள் பெற்றால் உரிய நேரத்தில் கடமைக்கு சமூகமளிக்க முடியாதென்பதால், விசேட ஏற்பாட்டில் பெற்றோல் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து வடக்கிலுள்ள 7 சாலைகளின் ஊழியர்களும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் குதித்துள்ளனர்.
இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் மாவட்ட செயலாளர், யாழ், காரைநகர் பிரதேச செயலாளர்கள், இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகள் பேச்சில் ஈடுபட்டு, எரிபொருள் வழங்கல் பொறிமுறையொன்றை உருவாக்க இணக்கம் கண்டுள்ளனர்.
வவுனியாவிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சியிலும் பேச்சு நடந்து வருகிறது.
எனினும், முல்லைத்தீவில் முரண்பாடான சூழல் ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் 89 பேரில், முதற்கட்டமாக 50 பேரின் விபரங்கள் வழங்கப்பட்டு, வாராந்தம் 3 லிட்டர் பெற்றோல் கோரப்பட்டது.
எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்களிற்கு மட்டுமே எரிபொருள் வழங்குவோம், வெளிமாவட்டத்தினருக்கு வழங்க மாட்டோம் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை முல்லைத்தீவு சாலை ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாவட்ட செயலகத்தின் பரிந்துரையை ஏற்க முடியாதென தெரிவித்து, தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.