அக்கரைப்பற்றில் திருமணம் செய்து கொள்ள முயன்ற இரண்டு பெண்களும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதில் இந்தியப் பெண் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக பெண்கள் அமைப்பொன்று பொறுப்பேற்றது.
அக்கரைப்பற்றை சேர்ந்த பெண், சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று புறநகர் பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் தாயொருவரும், இந்தியாவை சேர்ந்த இளம் பெண்ணொருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதை தடுத்து நிறுத்தும் படியும் அக்கரைப்பற்று பெண்ணின் தந்தை அண்மையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதையடுத்து, 19 வயதான அக்கரைப்பற்று பெண்ணும், அவரது வீட்டில் தங்கியிருந்த 24 வயதான இந்தியப் பெண்ணும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, கல்முனை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அவர்களை கல்முனை வைத்தியசாலையில் அனுமதித்து, மனநல பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.
அக்கரைப்பற்று பெண் திருமணமானவர். அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.
அவரும், தமிழகத்தின் விழுப்புரம், குன்னுத்தூரை சேர்ந்த கலைப்பட்டதாரியான 24 வயதான இளம்பெண்ணும் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமாகி, காதல் வசப்பட்டனர். இரண்டு பெண்களும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அக்கரைப்பற்று பெண்ணை, தமிழகம் வருமாறு அவர் அழைத்தார். ஆனால், தற்போது இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏராளம் மக்கள் வரிசையில் நிற்பதால், அக்கரைப்பற்று பெண்ணினால் விரைவாக கடவுச்சீட்டை பெற முடியவில்லை.
இதையடுத்து, தமிழக பெண் கடந்த வாரம் இலங்கை வந்தார். அக்கரைப்பற்று பெண்ணின் வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர்.
இரண்டு பெண்களின் அசாதாரண நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவரது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின் போது இலங்கைப் பெண் தனது தோழியுடன் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்ததாகவும், அனுமதிக்காவிட்டால் உயிரை மாய்ப்போம் என்றும் தெரிவித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இருவரது மனநல பரிசோதனை அறிக்கை இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர்கள் சீரான மனநிலையுடன் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள் அமைப்பொன்று முன்னிலையாகி, இந்திய பெண்ணை இந்தியாவிற்கே அனுப்பி வைப்பதற்காக, இந்திய தூதரகத்திடம் ஒப்படைப்பதாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்திய பெண்ணை விடுவித்து, மட்டக்களப்பு பெண்கள் அமைப்பிடம் ஒப்படைத்தது.
அக்கரைப்பற்று பெண், ரூ.150,000 சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். குழந்தையின் எதிர்காலம் கருதி அவரை பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு ஜூலை மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.