கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மக்கள் பல கிலோமீற்றர் நீளத்திற்கு மக்கள் வெயிலில் காத்திருக்கையில், பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் குறுக்கால் புகுந்து தனது காருக்கு பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்றதாக மக்கள் விசனம் தெரிவித்தனர்.
கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான, கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இன்று இந்த சம்பவம் நடந்தது.
கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பழைய வைத்திய சாலை வரை ஒரு பக்கம் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
மறுபுறம் கரடி போக்கில் இருந்து பரந்தன் நோக்கி நீண்ட வரிசையில் முச்சக்கர வண்டிகளும் வாகனங்களும் காத்திருக்கின்றன.
கரடிப்போக்கு சந்தியில் இருந்து உருத்திரபுரம் பகுதியில் அதிபர்களும் ஆசிரியர்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
உச்சி வெயிலில் மக்கள் நீண்டநேரம் காத்திருக்கையில், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவராசா, தனது காரை முன்னால் செலுத்தி சென்று ரூ.16,000 இற்கு பெற்றோல் நிரப்பிக் கொண்டு சென்றார்.
அவரது கார் முன்னால் செல்ல அங்கிருந்தவர்கள் வழியேற்படுத்திக் கொடுத்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தகவல் வெளியிடுகையில், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவராசா இங்கு வந்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ஊழியர்களிற்கு பணிஸ் வாங்கிக் கொடுத்தார். சற்று நேரத்தில் அவரது கார் முன்னால் கொண்டு வரப்பட்டு, ரூ.16,000 இற்கு பெற்றோல் நிரப்பப்பட்டது என்றார்கள்.
ஆனால், இன்று இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கு 3000 ரூபாவுக்கும் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவுக்குமே எரிபொருள் வழங்கப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.மோகனபவனை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியது.
அப்படியொரு தவறு நிகழ்ந்து விட்டதை அவர் ஏற்றுக்கொண்டார். தகவலறிந்த பின்னர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரை தொடர்பு கொண்டு வினவியதாகவும், தனக்கு தெரியாமல் நிரப்புவர் பெற்றோல் அடித்து விட்டதாகவும், பிரதேசசபை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் பெற்றோல் அடித்ததாக கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் பற்றி ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
வரிசையில் நிற்காமல் பெற்றோல் பெற்றது மட்டுமல்லாமல், பொதுமக்கள் எரிபொருள் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், இது போல அதிக தொகைக்கு எரிபொருளை நிரப்பியது தொடர்பில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர ஜீவராசாவை செய்தியாளர் தொடர்பு கொண்டு வினவியபோது, ‘ சேரின் (நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்) வாகனம் பழுதடைந்துள்ளதால், அவரை ஏற்றியிறக்குவதற்காகவே அதிக தொகையில் எரிபொருள் பெற்றுக்கொண்டதாக’வும் குறிப்பிட்டார்.
சில மாதங்களின் முன்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டு, கரைச்சி பிரதேசசபை அமர்வில் கலந்து கொள்ள ஜீவராசா மாட்டு வண்டியில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.