திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதி மரத்தடி சந்தியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு படையினருடன் முரண்பட்ட பொதுமக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாள்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து இதுவரை எரிபொருள் வராத நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளருக்கு சொந்தமான மூன்று மோட்டார் கார்களுக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் கடமையிலிருந்த பாதுகாப்பு படையினரிடம் பெட்ரோல் இல்லை என இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருக்கும் இவ்வேளையில் குறித்த மோட்டார் கார்களுக்கு எவ்வாறு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது என கேட்டபோது கடமையில் இருந்த பாதுகாப்பு படையினர் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்து பாதுகாப்பு படையினருடன் முரண்பட்ட பொதுமக்கள் திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திருகோணமலை தலைமையக பொலிசாரின் தலையீட்டில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையை கேட்டறிந்து ஊழியர்களிடம் வினவியபோது குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 250 லிட்டர் நிலையான மிகுதி பெட்ரோல் வைத்திருப்பதாகவும் இவ்வாறு வருகை தந்த இரண்டு மோட்டார் கார்களும எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளரின் வாகனங்கள் எனவும் எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தெரிவித்தனர்.
பின்னர் பொலிசாரின் தலையீட்டில் குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எரிபொருள் இல்லையென எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டால் யாராக இருந்தாலும் எரிபொருள் வரும் வரும் வரை எரிபொருள் விநியோகம் சற்றும் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என கடமையில் இருக்கும் பொலிசாருக்கு திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எ.எஸ்.கே.ஜயரத்ன அவர்கள் உத்தரவிட்டதுடன் பொதுமக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ்-