26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

திக்கம் வடிசாலை பறிபோகிறது; எதிர்த்து போராட அணிதிரளுங்கள்: பொ.ஐங்கரநேசன் அழைப்பு!

திக்கம் வடிசாலையின் உரிமத்தைத் தங்களிடம் மீளவும் கையளிக்குமாறு அதை நிர்வகித்துவரும் வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர். பல போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனால், இப்போது இவர்களைப் புறந்தள்ளி, இவர்களுக்கே தெரியாமல் பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ திக்கம் வடிசாலையைத் தென்னிலங்கையைச் சேர்ந்த வி.ஏ டிஸ்ரிலறிஸ் என்ற நிறுவனத்துக்கு 25 வருடக் குத்தகைக்குத் தாரை வார்த்துள்ளார்.

பேரினவாத எதேச்சாதிகாரப் போக்குடன் வடமராட்சி பனைத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையைத் தட்டிப்பறித்து தனது இனத்தவர்களிடம் கையளித்துள்ளார் என்று தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திக்கம் வடிசாலை தொடர்பாக இன்று சனிக்கிழமை (25) பொ. ஐங்கரநேசன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பனை தமிழ் மக்களின் இயற்கை வளங்களில் முதன்மையானது. இதிலிருந்து பொருளாதார ரீதியாக அதியுச்சப் பயனை அறுவடை செய்யவேண்டும் என்ற நோக்குடனேயே பனை அபிவிருத்திச்சபை தாபிக்கப்பட்டது. ஆனால், இதன் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் பனை பற்றிய பட்டறிவையோ, படிப்பறிவையோ கொண்டிராமல் அரசியற் சிபார்சை மட்டுமே தகுதியாகக் கொண்டிருந்தார்கள். ஆளுங்கட்சியில் அல்லது அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்சிகளில் இருந்து தேர்தலில் தோற்றுப்போனவர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவர்களால் பனைத் தொழில் சீரழிந்து இறங்கு முகமே கண்டது. இப்போதைய தலைவர் கிரிசாந்த பத்திராஜவும் அதையே கனக்கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

திக்கம் வடிசாலை 1983 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலும் பனை, தென்னைவள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் நிதியிலும் உருவாக்கப்பட்டது. சுயாதீனமாக இலாபத்தோடு இயங்கிவந்த இந்த வடிசாலை 1987இல் வடமராட்சியில் இடம்பெற்ற ஒப்பறேசன் லிபறேசன் இராணுவத் தாக்குதல் காரணமாகப் பலத்த சேதமடைந்தது. இதனால், பனை அபிவிருத்திச்சபையிடம் இருந்து உதவிபெற நேரிட்டது. ஆனால். ஒட்டகத்துக்கு இடம்கொடுத்த கதையாகப் பனைத் தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2001ஆம் ஆண்டு அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் திக்கம் வடிசாலை பனை அபிவிருத்திச் சபையின்கீழ்க் கொண்டுவரப்பட்டது.

அப்போதிருந்தே திக்கம் வடிசாலையின் சுயாதீனம் பறிபோனது.

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர்கள் அரசியல் நியமனம் என்பதால் அவர்களின்கீழ் இருந்துவந்த திக்கம் வடிசாலையின் வளங்களும் அரசியற் தேவைகளுக்கே பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனாலேயே, திக்கம் வடிசாலையை பனைஅபிவிருத்திச் சபையிடமிருந்து விடுவிக்க வடமராட்சி பனைசார் உற்பத்தித் தொழிலாளர்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.

பனை தமிழர்களின் தேசியவளம் என்பதால் இது ஒட்டுமொத்தத் தமிழர்களின் பிரச்சினையும் ஆகும். திக்கம் வடிசாலையைத் தென்னிலங்கை முதலாளிகளிடமிருந்து மீட்கவும் பனைஅபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜவின் பேரினவாத எதேச்சாதிகாரத்தைக் கண்டித்தும் பனைசார் உற்பத்தித் தொழிலாளர்களின் பின்னால் தமிழர்களாக நாம் அனைவரும் அணிதிரண்டு போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மருதங்கேணி LB Finance ஊழல் சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் மீது அழுத்தம்!

east tamil

ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

east tamil

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

Leave a Comment