அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது. இதன்மூலம் 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில், ட்ரெவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 70 (65), ஆரோன் பின்ஞ் 62 (85), அலெக்ஸ் காரி 49 (52), கிளென் மக்ஸ்வெல் 33 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜெஃப்ரி வன்டர்சே 3, டுனித் வெல்லலாகே 1, தனஞ்சய டி சில்வா 1, துஷ்மந்த சமீர 1 விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு 292 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, 48.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
பதும் நிஸங்க கன்னி ஒருநாள் சதம் அடித்தார். அவர் 147 பந்துகளில் 137 ஓட்டங்கள் விளாசினார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டம் இது.
குசல் மென்டிஸ் 87 (85) ஓட்டங்களை பெற்றார்.
நிசங்கவும் மெண்டிஸும் இரண்டாவது விக்கெட்டுக்கு 170 ரன்களைச் சேர்த்தனர். இதன்போது மென்டிஸ் தசைப்பிடிப்பினால் ஓட முடியாத நிலைமையில் retired hurt முறையில் வெளியேறினார்.
பந்துவீச்சில், ஜஹை றிச்சர்ட்ஸன் 2, ஜொஷ் ஹேசில்வூட் 1, கிளென் மக்ஸ்வெல் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பதும் நிஸங்க தெரிவானார்.