வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (13) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கப்பம் பெறுவதற்காகவே இவர் கடத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை பூவரசங்குளம், வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து குறித்த 55 வயதான பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணின் மகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை விடுவிக்க 500,000 ரூபா கப்பம் கோரியுள்ளனர். கப்பம் கொடுக்காவிட்டால் குறித்த பெண்ணை சுட்டுக் கொன்று விடுவோம் என சந்தேக நபர்கள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பில் குறித்த பெண்ணின் மகள் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து பணம் கொடுக்கும் விதத்தில் சந்தேக நபர்கள் அழைக்கப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கப்பம் பெறுவதற்காக கடத்தி சிறைபிடிக்கப்பட்டிருந்த பெண்ணையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
அத்துடன் கடத்தல் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 49 வயதுடைய வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.