சொத்திற்கு ஆசைப்பட்டு, தனது மனைவியின் தாயாரை எரித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி அதிகாலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்தது.
அதிகாலை 1 மணி தொக்கம் 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 74 வயதுடைய பெண் எரித்துக் கொல்லப்பட்டிருந்தார்.
அத்துடன், வீட்டிலிருந்த அலமாரிகளை உடைத்து பெருமளவு நகை, பணமும் திருடப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் இந்த கொலையை செய்திருக்கலாமென்ற சந்தேகம் நிலவி வந்தது.
நகைகள் கொள்ளையிடப்பட்ட அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணே கொல்லப்பட்டார்.
எவ்வாறாயினும், சந்தேகநபரின் மருமகனின் நடத்தையில் சந்தேகமடைந்த பொலிசார், அவரை கைது செய்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
கொல்லப்பட்ட பெண்ணின் ஒரே மகளின் கணவரே இந்த கொலையை செய்துள்ளார்.
தனது மனைவி வத்தளை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சொத்துக்களை கையகப்படுத்த அத்தையை கொலை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இறந்த மூதாட்டியின் பெயரில் ரூ.40 மில்லியன் ரூபா பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. பல நிலங்கள், தங்க நகைகளையும் வைத்துள்ளார்.
தங்க நகைகள்,பணம் என்பவற்றை கொள்ளையிட்டு, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மறைத்து வைத்துள்ளார்.
சந்தேக நபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.