கும்பகோணம் அருகே செய்து கொண்ட தங்கையையும், அவரது காதல் கணவரையும் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் முடிந்த 5-வது நாளில் அரங்கேறிய சாதி ஆணவ வெறி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது சகோதரி சரண்யா செவிலியராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கும் உறவினரான ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு வீட்டில் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகின்றது.
சரண்யா ஏற்கனவே மோகன் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிந்தும், ரஞ்சித்குமாரை கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றதால் வீட்டைவிட்டு வெளியேறி, காதலன் மோகனைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வேறு வேறுசாதி என்பதால் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மோகன் (நாயுடு) பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சரண்யா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
சரண்யாவை சக்திவேலின் மனைவியின் சகோதரர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைக்கலாம் என சக்திவேல் நினைத்திருந்த நிலையில் சரண்யா, மோகனை காதல் திருமணம் செய்தது சக்திவேலுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த நிலையில் சரண்யாவின் அண்ணன் சாதி மறுப்பு திருமணத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல அமைதி காத்து வந்தார்.
துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த அரபத் நிஷா என்பவரது நகையை சரண்யா வங்கியில் அடமானம் வைத்திருந்தார். அடமானம் வைத்த நகையை மீட்டு தரக்கோரி நகையின் உரிமையாளர் தொந்தரவு செய்யவே அதனை மீட்டு கொடுப்பதற்கு சரண்யா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோர் நேற்று சொந்த ஊருக்கு சென்றார். அப்போது தங்கை சரண்யாவை சந்தித்த அண்ணன் சக்திவேல், வீட்டில் மாப்பிள்ளை விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன் வந்து சாப்பிட்டு விட்டு செல்லும்படி அழைத்துள்ளார்.
சாதி கடந்த காதலை வீட்டில் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் தனது கணவருடன் அமர்ந்து தாய் வீட்டில் விருந்து சாப்பிட்டார் சரண்யா, விருந்து முடிந்து வீட்டிற்கு வெளியே வந்து கணவரின் ஊருக்கு புறப்பட்ட சரண்யாவையும், மோகனையும் , சக்திவேலும் , உறவினர் ரஞ்சித்குமாரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சரண்யாவின் தாய் தேன்மொழி தெரிவித்தார்.
சாலையில் இருவரையும் வெட்டிக் கொலை செய்த கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர், சக்திவேல், மற்றும் ரஞ்சித் ஆகியோர் கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்டால் , தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞர் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்தாலும், கொல்லப்பட்ட பெண்ணும், கொலை செய்தவர்களும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கொலை வழக்கு மட்டும் பதியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரண்யாவை தனது மைத்துனர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என சக்திவேலு நினைத்திருந்த நிலையில், சரண்யா , வேறு சாதியை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சக்திவேலும், ரஞ்சித்தும் விருந்துக்கு அழைத்து இந்த கொடூர கொலையை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.