மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சம்பாதிகும் பணத்தில் மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் பராமரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இன்னும் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
விமான நிலையத்தின் வருவாயை அதிகரிக்க மாற்று யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அது எந்த நேரத்திலும் விற்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தினார்.
“அவசர தரையிறங்குவதற்கான மாற்று விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை தொடர்ந்து இயக்க வேண்டும். இதன்காரணமாக விமான நிலையத்திற்கு நஷ்டம் ஏற்பட்டாலும் தயக்கத்துடன் கூட பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகள் வாழுமிடத்திற்குள் விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது மின்சார யானை வேலியை உடைத்துக்கொண்டு விமான நிலைய வளாகத்துக்குள் காட்டு யானைகள் நுழையும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காட்டு யானை அச்சுறுத்தலுக்கு தீர்வாக யானை வேலிக்கும் விமான நிலைய வளாகத்துக்கும் இடைப்பட்ட வெற்று நிலங்களில் பனை மரங்களை வளர்ப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டது. அது புத்திசாலித்தனமான முடிவல்ல என அப்போது எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய போதும், ராஜபக்ஷ குடும்பம் விமான நிலையம் அமைப்பதில் விடாப்பிடியாக இருந்தது. கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் விமான நிலையம் முறையாக பராமரிக்கப்படாததால் நட்டம் ஏற்பட்டது, நாம் ஆட்சிக்கு வந்தால் விமான நிலையத்தின் நிலைமையை மாற்றுவோம் என ராஜபக்ஷக்கள் கூறி வந்த நிலையில், விமான நிலையத்தின் உண்மைத்தன்மையை சம்பந்தப்பட்ட அமைச்சரே அம்பலப்படுத்தியுள்ளார்.