அமெரிக்காவின் மேரிலாந்தில் வியாழன் (9) அன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு மேரிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இந“்த சம்பவம் நடந்தது.
சந்தேக நபர் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேரிலாந்தின் ஸ்மித்ஸ்பர்க்கில் உள்ள கொலம்பியா மெஷின் இன்க் தொழிற்சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஃபொக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணி என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீஸ் வாகனங்கள் இருக்கும் வான்வழி காட்சிகளும் வெளியாகின.
கொலம்பியா மெஷின் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கொன்கிரீட் உற்பத்தி உபகரணங்களை வழங்குகிறது என்று அதன் இணையதளம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்களால் அமெரிக்கா திக்குமுக்காடி வருகிறது. டெக்சாஸில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். ஓக்லஹோமா மற்றும் நியூயார்க் ஆகிய இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைகள் அமெரிக்க அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் பரவலாகவும் எளிதாகவும் கிடைப்பதைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கடுமையான அரசியல் எதிர்ப்பைச் சந்திக்கிறது, குறிப்பாக குடியரசுக் கட்சியிலிருந்து.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஜூன் 8 அன்று துப்பாக்கி கட்டுப்பாட்டு மசோதாவை நிறைவேற்றியது, ஆனால் அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, ஏனெனில் ஜனநாயகக் கட்சிக்கு குடியரசுக் கட்சியின் ஆதரவு தேவைப்படும்.




