25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

இரத்தத்தை உறைய வைக்கும் வங்காலை படுகொலை: 16 வருடங்களாகியும் நீதியில்லை!

மன்னார் வங்காலையில் கணவன், மனைவி, அவர்களின் இரு குழந்தைகள் என நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (09) 16 வருடங்கள் முடிவடைகிறது.

மன்னார் வங்காலை தோமஸ்புரி கிராமத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை, இரு சிறுவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகக் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை பத்தாம் வட்டாரத்திலுள்ள தோமஸ்புரி கிராமத்திலேயே ஒரு வீட்டில் இந்தக் கோரக் கொலைகள் இடம் பெற்றுள்ளன.

படையினரே இந்த வீட்டினுள் நுழைந்து, வீட்டுக்காரரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மிகக் கொடுமையாகச் சித்திரவதை செய்த பின்னர் அனைவரையும் மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் என்பவரது வீட்டினுள் நுழைந்தவர்களே இந்தக் கொடூரப் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதன் போது தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் (35),அவரது மனைவி மேரிமெட்டலின் அல்லது சித்திரா (27) மற்றும் பிள்ளைகளான ஆன் லக்ஸிகா (9), ஆன் டிலக்ஸன் (7 ) ஆகிய நான்கு பேரூம் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு க்குப் பின்னர் நடைபெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இப்பகுதியில் சில மாதங்களாக இடம் பெற்று வரும் அச்சமூட்டும் சம்பவங்களால், தோமஸ்புரி கிராம மக்களில் மிக பெரும்பாலானோர் இரவு நேரங்களில் வங்காலை புனித ஆனாள், தேவாலயத்திற்குச் சென்று தங்கி விட்டு அதிகாலையில் வீடு திரும்புவது வழமை.

எனினும், படுகொலை நடந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் இவர்களது உறவினர்களான நான்கு குடும்பங்களும் வேறு ஒரு சில குடும்பங்களும் இரவு நேரத்தில் இடம் பெயராது தங்கள் தங்கள் வீடுகளிலேயே தங்குவார்கள்.

இந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை காலை நான்கு இராணுவத்தினர், கொலை நடைபெற்ற வீடு, அருகிலிருந்த ஒரு சில வீடுகளுக்கும் மட்டும் சென்று அங்கு இருப்போர் பற்றி அறிந்து சென்றுள்ளனர்.

வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர், தச்சுத் தொழிலாளியான மூர்த்தி மார்டின் என்பவரது வீட்டினுள் நுழைந்தவர்கள் இந்தக் கொடூரப் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் புரிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

மறு நாள் வெள்ளிக்கிழமை(09-06-2006) காலை ஏழு மணியாகியும் வீட்டில் இருந்து எவரும் வெளியே வராததால் பக்கத்து வீட்டிலிருந்த சகோதரி இவர்களது வீட்டுக்குச் சென்று முன் கதவைத் திறந்து பார்த்து அலறி உள்ளார்.

இவரது சகோதரி, வீட்டின் வரவேற்பறையில் ஆடைகள் அலங்கோலமான நிலையில் மேரிமெட்டலின் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அப்பகுதி எங்கும் இரத்தம் உறைந்து போய்க் கிடந்தது. அவரது அலறல் சத்தத்தை ஏனையோர் அங்கு திரண்டு வந்து பார்த்தபோது, இறந்து கிடந்த பெண்ணின் உடலின் பல பகுதிகளிலும் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன் கூரான உளிகளால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அத்துடன், இவர் கொலை செய்யப்பட முன்னர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

அதே நேரம், இவரது கணவரையும் இரு பிள்ளைகளையும் அங்கு தேடியபோது, அருகிலுள்ள அறையொன்றினுள் மூவரதும் சடலங்கள் சுருக்குக் கயிறுகளில் தொங்கிக் கொண்டிருந்தன.

அறையின் தரையில் பெருமளவு இரத்தம் உறைந்து போயிருந்தது.

மாட்டின் அவரது பிள்ளைகளான ஆன் லக்ஸிகா, ஆன் டிலக்ஸன்ஆகியோரின் சடலங்களே, கயிற்றில் சுருக்கிடப்பட்டு வீட்டுக் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்தன.

இவர்களது உடல்களிலும் பல இடங்களிலும் உளிகளால் மிக ஆழமாக குத்தப்பட்ட பல காயங்கள் காணப்பட்டன.

இந்தச் சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதி எங்கும் காட்டுத்தீ போல பரவவே அங்கு வங்காலைக் கிராமத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதுடன் அவர்கள் உணர்ச்சி வசப்பட்டும், கொந்தளித்தும் போயிருந்தனர்.

இது பற்றி அறிந்து அப்போதைய மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ரி.ஜே. பிரபாகரன், மன்னார் ஆயர் வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை , மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம், மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி. மெல், நானாட்டான் பிரதேச செயலர் என்.திருஞானசம்பந்தர், இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளென பெருமளவானோர் அங்கு திரண்டனர்.

இதன்போது அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும், இராணுவத்தினரே இந்தக் கொடூரங்களைச் செய்ததாகவும் அவர்களைத் தங்களுக்குத் தெரியுமென கோசமிட்டதுடன் வீட்டிற்கு வெளியே பல இடங்களிலும் காணப்பட்ட இராணுவச் சப்பாத்து அடையாளங்களையும் அங்கு கிடந்த இராணுவப் பொருட்கள் சிலவற்றையும் அனைவருக்கும் காண்பித்தனர்.

இதையடுத்து அனைத்து தடயப் பொருட்களையும் சேகரிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்ட பின், சடலங்களை பிரேத பரிசோதனைக் குட்படுத்துமாறும் பணித்தார்.

அதே நேரம், இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமுற்ற ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அப்பகுதிக்கு பெருமளவு கலகத் தடுப்பு பொலிஸாரும் இராணுவத்தினரும் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டனர்.

எங்கும் பெரும் பதற்றம் நிலவிய அதேநேரம், தோமஸ்புரி மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறி வேறிடங்களுக்குச் சென்றனர்.

தமிழ் மக்கள் மீது அரச இராணுவ இயந்திரத்தினால் ஏவிவிடப்பட்ட எண்ணற்ற படுகொலை சம்பவங்களில், இன்னும் ஒரு எண்ணிக்கையாக வங்காலை படுகொலையும் அமைந்தது.

வழக்கம் போல இந்த கொடூரத்திற்கு காரணமானவர்களும் கண்டறியப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment