கப்புடாஸ் பாடல் எனது தொலைபேசி ரிங்ரோனாகவும் உள்ளது. காகம் யாருக்கும் தீங்கு செய்யாத மிருகம் என தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.
இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னால் செய்ய வேண்டியதை என்னால் முடிந்தவரை செய்தேன் என்று நினைக்கிறேன், ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் என்னால் செய்ய முடியவில்லை.
ஆனால் இலங்கைக்கு வந்த போது நான் எதிர்பார்த்தது அப்படியல்ல. நான் அந்த நேரத்தில் இரண்டு பெரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விரும்பினேன். நல்லாட்சி அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட போது. 2015 ஆம் ஆண்டு ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், நான் பல்வேறு ஊழல்கள் மற்றும் மோசடிகள் செய்தேன் என கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டேன் கடந்த வாரம் நான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அந்த வழக்குகளை எதிர்கொள்வது எனது முதல் நோக்கம்.
இரண்டாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நானே பொறுப்பு என கூறப்பட்டது. அந்த இரண்டு பணிகளும் நிறைவேற்றப்பட்டன. என்னுடைய இரண்டு நோக்கங்களும் நிறைவேறிவிட்டன.
அதைத் தவிர, நிதியமைச்சு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை என்றார்.
தாம் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற போதும் நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் வந்த பின்னர்தான் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியமாக குறைந்துவிட்டது என்பதை நான் ஏற்கவில்லை. அப்படி யாரும் சொன்னால் அது தவறான தகவல். ஏனெனில், நான் வரும்போது வெளிநாட்டு கையிருப்பு என்று எதுவும் இல்லை. என்னிடம் அத்தகைய இருப்பு இருந்தால் நானும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பேன் என்றார்.
இதேவேளை, தாம் அமைச்சராக இருந்த காலத்தில் பெறப்பட்ட கடன்கள் மூலமே நாட்டிற்கு எரிபொருள் மாவு மற்றும் உரம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செய்தியாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வியெழுப்பிய போது, அதற்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கும் போது ஏதாவது பிழையாக சொன்னால், கப்புடாஸ் மாதிரி ஏதாவது ஒரு பெயர் வைத்து விடுவார்கள், சிங்களத்தில் பதில் சொல்கிறேன் என குறிப்பிட்டு, சிங்களத்திலேயே பதிலளித்தார்.
‘எனக்கு தெரிந்த வரை காகம் கொடிய விலங்கல்ல. நான் யார் மீதும் குரோதம் வைக்காதவன். ஆகவே யார் எதை கூறினாலும் பரவாயில்லை. எனது தொலைபேசியிலும் கபுடாஸ் பாடல் ரிங் ரோன் உள்ளது. எனக்கும் அது பிடிக்கும்” என்றார்.