மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் பொறாமையடைந்த கணவன், அவர் வேலைக்கு செல்வதை தடுக்க, மனைவியின் கையை வெட்டி ஒளித்து வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின், கொல்கத்தா அடுத்த கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது.
அங்குள்ள கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. இவரது மனைவி ரேணு காதுன்.
தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவி செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 3 வருடங்களாக அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். இந்த பணியில் இருந்த போதே அவருக்கு திருமணம் ஆனது.
கடந்த வாரம், அவருக்கு அரசு மருத்துவமனை செவிலியர் பணி நியமன கடிதம் கிடைத்தது.
எனினும், அவரது கணவன் ஷேர் முகமதுவிற்கு இதில் உடன்பாடில்லை.
திருமணத்தின் போதே, அவர் வேலைக்கு செல்லக்கூடாது என ஷேர் முகமதும், அவரது தாயாரும், ரேணுவை வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால் ரேணு காதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்து வேலைக்குச் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ரேணுவை தலையணையால் அடித்த கணவன் பின்னர் அவரை நிலத்தில் விழுத்தி, மணிக்கட்டுடன் கையை அறுத்துள்ளார்.
ரேணு மயங்கி விழுந்த பிறகு, திங்கட்கிழமை விடிகாலையில் முகமது அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். எனினும், துண்டிக்கப்பட்ட உள்ளங்கையை வீட்டில் மறைத்து வைத்துவிட்டே சென்றுள்ளார். அந்த பெண் சுயநினைவு அடைந்து தனக்கு நேர்ந்த பரிதாபத்தை விவரித்ததை அடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ,” என்று உள்ளூர் போலீஸ்சார் தெரிவித்தனர்.
ரேணுவை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் முகமது தலைமறைவாகி விட்டார்.
ரேணுவின் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த வாய்ப்புள்ளதால், கையை தேடுமாறு பொலிசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், துண்டிக்கப்பட்ட கை மீண்டும் பொருத்தப்படக்கூடாது என்பதற்காகவே கையை வீட்டில் எங்கோ ஒளித்து வைத்து விட்டு, ரேணுவை மட்டும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார் கணவர்.
ரேணுவின் தந்தை அஜிசுல் ஹக் கூறுகையில், “ரேணுவின் கணவனும், மாமியாரும் அவள் வேலை செய்யும் முடிவுக்கு எதிராக இருந்தனர். சமீபத்தில், அவள் ஒரு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாள். அவள் பணியில் சேரக்கூடாது என்று அவளுடைய மாமியார் மற்றும் முகமது விரும்புவதாக ரேணு என்னிடம் புகார் செய்தார். தன் இலக்கை அடைவதற்கு அவள் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை” என்றார்.
தற்போது முகமதுவும், குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் வீடு பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.
பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
முகமதுவிற்கு குறிப்பிடும் படியான தொழில் இல்லை. பெட்டிக்கடையொன்றை நடத்தி வருகிறார்.
மனைவி வேலைக்கு செல்வது அவருக்கு பொறாமை மற்றும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியுள்ளது.
அரசு மருத்துவமனையில் சேர்த்த பிறகு ரேணு தன்னை பிரிந்து சென்று விடலாம் என முகமது தனது நண்பர்களிடம் கூறியது போலீசாருக்கு தெரியவந்தது.




