கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி கோதுமை மாவை ஏற்றிச் சென்ற ரயிலில் தலபத்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் மோதுண்டு இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு யானை காயமடைந்துள்ளதாக கல்ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானையால் ஏற்பட்ட விபத்தினால் ரயில் தடம் புரண்டதுடன் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 4 வயது யானையும் 1 வயது குட்டி யானையும் உயிரிழந்துள்ளதுடன் 15 வயதுடைய மற்றுமொரு யானை படுகாயமடைந்துள்ளதாக கவுடுல்லா பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹுருலு சுற்றுசூழல் பூங்காவில் சுற்றித் திரியும் ஏராளமான காட்டு யானைகள், கலோயா காட்டில் இருந்து குடிநீருக்காக தலபத்கந்த பகுதிக்கு வழமையாக வருகின்றன.
காட்டுயானைகள் தொடர்ச்சியாக புகையிரத பாதையை கடக்கின்றன என்ற விசேட பலகைகள் வழமையாக வைக்கப்பட்டுள்ள போதிலும் புகையிரத சாரதிகள் வேக வரம்பை மீறி பயணிப்பதால் காட்டுயானைகள் ஆபத்தில் சிக்குவதாக கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
