வவுனியாவில் இரு எரிவாயு விற்பனை நிலையங்களில் வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில் பாவனையாளர் அதிகாரசபையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இன்று (03) 5 எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த விநியோக நிலையங்களுக்கு முன்னால் மக்கள் இரவு முதல் நீண்ட வரிசையில் எரிவாயு கொள்கலனுடன் நின்றனர்.
இதன்போது, வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு எரிவாயு விற்பனை நிலையத்தினர் பூனாவ பகுதிக்கு சென்று 20 எரிவாயுவைப் பெற்றதுடன், தமக்கு எரிவாயு வழங்கப்படவில்லை என கூறி நீண்ட வரிசையில் நின்ற மக்களை திருப்பி அனுப்ப முற்பட்டனர். இதனால் மக்களுக்கும் குறித்த வர்த்தக நிலையத்தினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பிரதேச செயலக அதிகாரிகள், நெளுக்குளம் பொலிசார் வருகை தந்து எரிவாயுவை மக்களுக்கு வழங்குமாறு கூறினர்.
வர்த்தக நிலையத்தினர் தாம் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள நபர்களுக்கு தான் எரிவாயுவை வழங்க முடியும் எனக் கூறினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாவனையாளர் அதிகார சபையினர் எரிவாயுவை பதுக்க முடியாது. பூனாவ பகுதியில் இருந்து பெற்றப்பட்ட எரிவாயுவை வரிசையில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், எரிவாயுவை வழங்கா விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தினர்.
இதனால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அரச அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இருப்பினும், பாவனையாளர் அதிகார சபையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய 20 எரிவாயுகளில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு ஒன்று வழங்கப்பட்டதுடன், ஏனைய 19 எரிவாயுக்களுக்கும் அப் பகுதியில் நீண்ட வரிசையில் நின்ற 19 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதேபோன்று, வவுனியா, வேப்பங்குளம், 60ஏக்கர் பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திலும் அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு வந்த 20 எரிவாயுக்களையும் தமது வாடிக்கையாளருக்கு வழங்கப் போவதாக தெரிவித்து, வர்த்தகர் பிறிதொரு வீட்டில் இறக்கி வைத்திருந்தமையால் நீண்ட வரிசையில் நின்ற மக்களுக்கும் வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார் வர்த்தக நிலைய உரிமையாளருடன் கலந்துரையாடி அங்கு வரிசையில் நின்ற 15 பேருக்கும், வர்த்தக நிலையத்தில் பதிவு செய்த வாடிக்கையாளர் 5 பேருக்கும் என 20 பேருக்கு எரிவாயுக்களைப் பகிர்ந்தளித்திருந்தனர்.