“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உத்தேச யோசனை அறிக்கையில் இலங்கை முஸ்லிம்களின் பொதுச் சட்டத்தை இரத்துச் செய்து சகலருக்கும் பொதுவான சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று செயலணியால் வெளியிட்டுள்ள கருத்துக்கு எதிராக எனது எதிர்ப்பை முன் வைத்து நான் இந்த செயலணியின் சகல விதமான பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமச் செய்யத் தீர்மானித்துள்ளேன். எமது மூதாதையர்கள் இலங்கைக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்புக்களை என்னால் ஒரு போதும் காட்டிக்கொடுக்க முடியாது என்பதோடு, எமது மூதாதையர்கள் ஒருபோதும் அடிப்படைவாதிகள் அல்லர் என்பதையும் நான் உங்களிடம் வலியுறுத்துகிறேன். அவர்கள் பெற்றுத்தந்த உரிமைகள் மற்றும் பாரம்பரியங்களில் ஒரு சிறு அளவேனும் அடிப்படைவாதம் இல்லை என்பதை இங்கு குறிப்பிடுகிறேன் என “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினராக இருந்து கடந்த 2022.05.26 அன்று இராஜினாமா செய்த கலீலுர் றஹ்மான், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவுக்கு முகவரி இட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் யோசனைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாகவும் இராஜினாமா தொடர்பாகவும் என தலைப்பிட்டு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் மேலும் மேதகு ஜனாதிபதி அவர்களே, “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள அறிக்கையில் எனக்கு கையொப்பமிட முடியாதென்பதோடு, இந்தப் பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், யோசனைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்தையும் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பில் கருத்தில் கொள்ளுமாறு நான் உங்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
காதி முறைமை
“ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான செயலணி உத்தேசித்துள்ளதைப் போன்று கண்டியர் மற்றும் தேசவழமை ஆகிய சட்டங்கள் பிரதேச சட்டங்களாக இருந்தாலும் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாம் மார்க்கத்தின் வாழ்க்கைத் திட்டமாகும் என்பதை நான் ஞாபகமூட்டுகிறேன். இந்த வாழ்க்கைத் திட்டத்தில் எந்தவொரு அடிப்படைவாதமும் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். குறிப்பாக காதி எனப்படும் செயற்பாடு என்பது முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்தில் உள்ள குடும்பங்களின் பிரச்சினைகளை மத்தியஸ்த சபையைப் போன்று
தீர்ப்பதாகும். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பாரியளவிலான நிதியைச் செலவிடாமல் அதாவது சட்டத்திற்கான கட்டணம் அறவிடப்படாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கிடைக்கின்றமை அதன் சிறப்பம்சமாகும். காதி முறையின் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால் அதற்கு மேலுள்ள நீதிமன்றங்களை நாடமுடியும் என்பதால் அந்த முறையில் அடிப்படைவாதம் இல்லை என்பது உறுதியாகிறது. எனினும் காதி முறைமையில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக சில காமுகர்கள் பெண் தரப்பினருக்கு மேற்கொண்ட தவறான செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு காதி முறையை வலுப்படுத்தி நியாயமான சட்டத்தை மதிக்கக்கூடிய திருத்தங்களுடன் கூடிய முறையான அல்லது நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான தரப்பினர் முன்மொழிந்த யோசனைகளைத் கருத்தில் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது என்னுடையதும் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்களினதும் ஏகோபித்த கருத்தாகும்.
ஏந்தவொரு சட்டத்திலும் உள்ள குறைபாடுகள் மட்டும் ஓட்டைகளினூடாக நுழைபவர்கள் இருந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதே அன்றி அதனை இரத்துச் செய்வது புத்திசாதுரியமான செயற்பாடாகக் கருதிவிட முடியாது என்பதை வலியுறுத்துகிறேன். முஸ்லிம் விவாகச் சட்டத்தின் மூலம் சிறுவர் திருமணங்கள் பரவலாக இடம்பெறுவதாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி அது தொடர்பில் நாட்டின் மொத்த சிறுவர் திருமண சதவிகிதத்தைக் கருத்தில்கொள்ளாததையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோன்று காதி முறைமையின் மூலம் பாலியல் இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்படுகிறது என்ற நிலைப்பாட்டில் உள்ள “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அதாவது நிர்வாகச் செயற்பாடுகள் உட்பட பல்வேறு பகுதிகளினதும்,
சில சந்தர்ப்பங்களில் இடம்பெறும் பாலியல் இலஞ்சம் காரணமாகவும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எம்மிடம் இல்லை என்பதோடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு காதி முறைமை அல்லது ஏனைய சட்டங்களை இரத்துச் செய்வது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதற்குப் பதிலாக நாம் பாலியல் இலஞ்சம் பெறும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதை விடுத்து பெண்ணியவாதிகளின் நிலைப்பாட்டைப் போன்று “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியும் அதே நிலைப்பாட்டை வகிக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதோடு முஸ்லிம் சமூகத்தை ரோம, டச்சு விவாக விவாகரத்துச் சட்டத்துடன் இணைப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
முஸ்லிம் சொத்துரிமைச் சட்டம்
முஸ்லிம் சொத்துரிமைச் சட்டத்தின் மூலம் எவருக்கேனும் அநீதி இழைக்கப்படுமாயின் அவ்வாறான அநீதிகள் ஏற்படாதிருக்க அவற்றிலுள்ள குறைபாடுகளை நீக்கி அந்தச் சட்டத்தைத் திருத்தியமைத்து அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதோடு அதனை இரத்துச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சட்டத்தில் பிரிவினைவாதமோ அடிப்படைவாதமோ இடம்பெறவில்லை என்பதோடு இது முஸ்லிம் மக்களின் சொத்துப் பகிர்வு தொடர்பான செயற்பாடாகும். இதனால் முஸ்லிம் சொத்துரிமைச் சட்டத்தை இரத்துச் செய்து முஸ்லிம் சமூகத்தை ரோம, டச்சு சட்டத்தோடு இணைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆடைகள்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை பாராளுமன்ற குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு (ஐதேக, ஐமச, ஸ்ரீலசுக, ஸ்ரீலபொபெ, ஜேவிபி, டிஎன்ஏ, ஸ்ரீலமுகா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு) வெளியிட்ட அறிக்கை மற்றும் மேற்குலகின் கருத்தை அடிப்படையாகக்கொண்டு ஆடைகள் பற்றி கவனம் செலுத்த எதிர்பார்த்துள்ள “ஒரே நாடு ஒரே சட்டம்” பற்றிய ஜனாதிபதி செயலணி அரைநிர்வாண ஆடைகள் பற்றிக்கவனம் செலுத்தாது
பன்முகத்தன்மையுடன் கூடிய இலங்கை சமூகத்தின் பல்வேறு பாடசாலைகளிலும், முஸ்லிம் சமூகத்திற்கு முகத்தை மறைக்காது தலையை மறைத்து நீண்ட காற்சட்டை அணியும் உரிமை அதாவது சுற்றுநிருபத்தாலும் அமுல்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்தாமையினால் ஏற்பட்டுள்ள அநீதியை ஏன் கண்டுகொள்ளவில்லை ? இதன் மூலம் அரைநிர்வாணத்திற்கான ஆடையை ஏற்றுக்கொண்டு முழுமையான ஆடையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதன் அர்த்தமாகுமா ?
வஹாபிசம்
வஹாபிசம் என்பது பூகோள அரசியல் தேவைகளுக்கு அமைய உலக வல்லரசுகளின் புலனாய்வு குழுக்களின் மூலம் அதிகாரத்தைத் தக்கவைக்கவும், அதிகாரத்தை சீர்குலைக்கவும், பிளவுபடுத்துவதற்கும் பிரிவினைவாத ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் பிரிவினைவாத அரசியல் சிந்தனையாகும். இதில் பல்வேறு மூலங்களில் இருந்தும் உருவாகிய சிந்தனைகள் இஸ்லாம் மார்க்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி அதாவது அச்சிந்தனை தான் உண்மையானதும் அமைதியானதும் இஸ்லாம் மார்க்கம் என்று கூறி அவர்களின் அதிகாரத்தைத்தக்க வைத்துக்கொள்வதற்காக பயன்படுத்தப்பட்டது. வரலாற்றின் நெடுகிலும் நாம் இதனை அவதானித்துள்ளோம். ஜனநாயகம், சோஷலிசம், தாராண்மைவாதம், பூகோள அரசியல் தேவைகளுக்கு அமைய உலக வல்லரசுகளின் புலனாய்வுக் குழுக்கள் தமது முகாமை வலுவூட்டுவதற்காகப் பயனப்படுத்தியதோடு மத்திய கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வஹாபிஸம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் மதம் என்ற போர்வையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அதன் பாதகமான விளைவுகளுக்கு இன்று உலகம் முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி முஸ்லிம்களின் உரிமைகளை இரத்துச்செய்ய முயற்சிப்பதன் மூலம் பிற்போக்கு சக்திகளுக்கு இலவசமான முறையில் சுலோகங்களை வழங்குகிறது. வஹாபிசம் தவ்ஹீத் எனப்படும் ஏகத்துவத்தைப் பயன்படுத்தி அமைதியான இஸ்லாம் மார்க்கத்தின் சிந்தனையை தமது கருத்தை பிரபலப்படுத்துவதற்கான கவசமாக பயன்படுத்த முயன்று வருகிறது. இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய சிந்தனைகள் இருக்க முடியுமாயினும் இஸ்லாம் என்ற போர்வையில் பிரிவினைவாதத்தை சமூகமயப்படுத்துவதை அமைதியான இஸ்லாம் மார்க்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
பத்வா
அமைதியான இஸ்லாம் மார்க்கம் பற்றி தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது அல்லது நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அல்லது கருத்துவேறுபாடான சந்தர்ப்பத்தில் இஸ்லாத்தின் கருத்தை அல்லது நிலைப்பாட்டை விளக்குவதற்காக பத்வா எனப்படும் கருத்துக்களை வெளியிடும் முறை காணப்படுகிறது. இவ்வாறான கருத்துக்களில் அடிப்படைவாதம் இருக்குமானால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சமயக் கருத்து எனப்படும் பத்வா என்ற அமைதியான இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் உரிமைக்கு தடங்களை ஏற்படுத்தல் என்பது அமைதியான இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.
தொழில் புரியும் இடங்களில் மதச் சுதந்திரம்
அரச நிறுவனங்களில் பணியாற்றும் திருமணமான பெண்களின் கணவன் மரணிக்கும் போது அந்தப் பெண் தனது இரத்த உறவுகள் அல்லாதவர்களிடமிருந்து 4 மாதங்களும் 10 நாட்களும் மறைவாக இருப்பதற்காக வழங்கப்படும் மத விடுமுறை உரிமையயை இரத்துச் செய்வதன் மூலம் இந்த சமூகம் அரசாங்கத் தொழிலிருந்து மறைமுகமான முறையில் தூரமாகலாம் இதனால் இந்த விடயம் பற்றி முஸ்லிம் சமூகத்துடன் விரிவாகக் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். அதேபோன்று எமது முன்னோர்கள் பெற்றுத் தந்த இந்த மதச்சுதந்திரத்திலும் எந்தவிதமான அடிப்படைவாதமும் இடம்பெறவில்லை.
ஒரினச்சேர்க்கை
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற அடிப்படையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பான செயலணி கருத்துக்களை முன்மொழிந்துள்ளமை பற்றி ஒரு இஸ்லாமியர் என்ற அடிப்படையில் அதனை முற்றாக நிராகரிப்பதோடு, அதனை முற்றாக எதிர்த்து நிற்கிறேன். இந்த அனாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள முயற்சிக்கும் செயலணி முஸ்லிம் சமூகத்தின் நாகரீகமான முஸ்லிம் தனியார் சட்டத்தை இரத்துச் செய்யவும் சொத்துரிமைச் சட்டத்தை இரத்துச் செய்யவும், ஒழுக்கமான ஆடைகளை ஏற்றுக்கொள்ளதிருக்கவும் முயற்சிப்பது ஏன் ?
ஹலால்
அதேபோன்று “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் மூலம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை பாராளுமன்ற குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு (ஐதேக, ஐமச, ஸ்ரீலசுக, ஸ்ரீலபொபெ, ஜேவிபி, டிஎன்ஏ, ஸ்ரீலமுகா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று ஹலால் முறைமை இடம்பெற வேண்டும் என்ற கருத்தானது தேசியக் கொள்கையாகும். அதனால், மேதகு ஜனாதிபதி அவர்களே,
இந்தப் பாராளுமன்றக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொள்வதோடு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கிடப்பிலுள்ள ஹலால் சட்டத்தின் உள்ளடக்கங்கள் பற்றியும் கவனம் செலுத்தி ஹலால் செயற்பாட்டை முஸ்லிம் கலாசாரத் திணைக்களம், உணவுத் திணைக்களம், ஆகிய நிறுவனங்களைத் தொடர்புபடுத்தி இதனை நுகர்வோர் அதிகாரசபையோடு அல்லது கட்டளைகள் நிறுவனத்தோடு இணைத்து ஹலால் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேற்படி பாராளுமன்றக் குழுவின் அறிக்கைக்கு அமைய ஹலால் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று கூறும் இந்த செயலணி ஏன் முஸ்லிம் சட்டத்தையும், சொத்துரிமைச் சட்டத்தையும் இரத்துச் செய்ய வேண்டும் ?
தவறான முறையில் மதமாற்றம்
தவறானமுறையில் மதமாற்றம் எனப்படும் மதத்தை மாற்றும் நடைமுறையானது நாகரீகத்தை மதிக்கும் இந்த உலகில் எவரும் ஏற்றுக்கொள்ளாததாகும். தவறான முறையில் மதமாற்றம் பற்றிக் கருத்து வெளியிடும் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி திருமணத்தை அடிப்படையாகக்கொண்டு மதத்தை மாற்றுதல் பற்றி செயலணி சமனான முறையில் நிலைப்பாட்டைக்கொண்டிருக்காமை சிக்கலுக்குரிய விடயமாகும்.
தொல்பொருள் தலங்கள்
ஏனைய மதத்தவர்கள் யாவர் என்பது பற்றி எதையும் குறிப்பிடாமல் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி ஏனைய மதத்தவர்களின் தொல்பொருள் தலங்களைப் பாதுகாப்பட வேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்தின் தனியார் சட்டத்தையும், சொத்துரிமைச் சட்டத்தையும் இரத்துச்செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை செயலணி ஏன் கொண்டுள்ளது ?
சிறைக்கைதிகளின் விடுதலை மற்றும் புனர்வாழ்வு
எல்ரிரிஈ மற்றும் சிங்களக் கைதிகள் செய்த தவறின் பாரதூரத்தை கருத்திட்கொள்ளாது அவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி சஹ்ரானுடன் அரசியல் மற்றும் சமயத் தலைவர்கள் மேற்கொண்ட சகலவிதமான அரசியல் சமூக, சமய செயற்பாடுகளின் மீது கவனம் செலுத்தி, பல்வேறு அரசியல்வாதிகளும் வழங்கிய தவறான தலைமைத்துவத்தின் முன்மாதிரியின் மீது கவனம் செலுத்தி சஹ்ரானை முஸ்லிம் சமூகத்தின் வீரனாகக் கருதி அவனுடன் முன்பு கூறிய அரசியல் தலைவர்களைப் போன்று சமய மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்ட சில அப்பாவி இளைஞர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுவிப்பது பற்றியும் அவர்களுககு ஏற்பட்ட அநீதி பற்றியும் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி கவனம் செலுத்தாதது ஏன் ?
கல்வி
கல்வி முறையின் மூலம் சில புதிய பாடதிட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று கூறும் இந்த செயலணி பிரபல தேசியப் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வளங்கள், வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், பௌதீக வளங்கள் என்பன ஏனைய பிரபலமற்ற மற்றும் சில மத்திய கல்லூரிகளில் இல்லாமை பற்றி கருத்து வெளியிடாமையினால் இந்த முரண்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணிக்கு உத்தியோகபூர்வமாக நான் வழங்கியுள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடுநிலையான, நியாயமான யோசனைகளைக் கருத்தில் கொள்ளாமை பற்றி நான் ஆச்சரியமடைகிறேன். இந்த யோசனைகளை நான் உத்தேச அரசியல் அமைப்புச் சட்ட மூலத்திற்காகவும் வழங்கியுள்ளேன். “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கான அடிப்படையான மூலப்பொருளாக நான் கருதுவது “ශ්රි ලංකා” என்ற இறையாண்மையுள்ள நாட்டின் பெயரையாகும். எமது அயல் நாடுகளான சார்க் நாடுகள் அழைப்படும் பெயர் மொழி, மதம், இனம் என்பனவற்றை அடிப்படையாகக்கொண்டு மாறுவதோ, மொழி பெயர்க்கப்படுவதோ இல்லை. அவ்வாறாயின் இலங்கை நாட்டின் பெயர் சிங்களத்திலோ, ஆங்கிலத்திலோ “ශ්රි ලංකා” என்று அழைக்கப்பட்டாலும் அது தமிழில் மாத்திரம் “இலங்கை” என்று அழைக்கப்படுவது தெளிவான பிரிவினைவாதமாகும் என்பதோடு நாட்டின் இறையாண்மைக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலாகும்.
“ලංකා බැංකුව” ஆங்கிலத்தில் “Bank of Ceylon” என்றும் தமிழில் “இலங்கை வங்கி” என்றும் “ලංකා විදුලි බලමණ්ඩලය” சிங்களத்திலும் ஆங்கிலத்தில் “Ceylon Electricity Board” என்றும் தமிழில் “இலங்கை மின்சார சபை” அழைக்கப்படுகிறது. ஆகையால் “Ceylon” என்பது சிங்களத்தில் “ලංකා” என்றும் தமிழில் “இலங்கை” என்றும் அல்லவா ? அவ்வாறென்றால் “ශ්රි ලංකා” ஆங்கிலத்தில் “Sri Lanka” என்றும் தமிழில் “இலங்கை” என்றும்
பயன்படுத்தப்படுவதன் அடிப்படை என்ன ? அதேபோன்று “ශ්රි ලංකා මාතා” என்ற தேசிய கீத வரியின் தமிழ்மொழிபெயர்ப்பு “ஸ்ரீ லங்கா தாயே” என்றே அமைந்திருக்கிறது. ஆனால் “ශ්රි ලංකා” என்ற பெயர் மட்டும் “இலங்கை” என்று தழிழில் குறிப்பிடப்படுகிறது. ஒருவருடைய பெயர் எந்த மொழியில் இருந்தாலும் அதன் மொழிபெயர்ப்பு இடம்பெறாது உரிய மொழியில் உச்சரிக்கப்படுகிறது. இதனால் பின்வரும் யோசனைகளை செயலணிக்கு முன்வைக்கிறேன்;
1. “ශ්රි ලංකා” என்ற பெயர் உலகில் எந்த மொழியால் பயன்படுத்தப்பட்டாலும் ஒரே பெயரால் உச்சரிக்கப்படுவதற்காக அரசியலமைப்பில் சில குறிப்புக்கள் சட்டரீதியாக இருக்க வேண்டும் என்று நான் முதலில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு யோசனை முன்வைக்கிறேன்.
2. “ශ්රි ලංකා” என்ற பெயர் இதன் பின்னர் தமிழ்மொழியில் “ஸ்ரீ லங்கா” என்று குறிப்பிடப்பட வேண்டும் என்று நான் இரண்டாவதாக “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணிக்கு யோசனை முன்வைக்கிறேன்.
அத்தோடு, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் மூலம் எந்தவொரு சலுகையையும் சிறப்புரிமையையும் பெற்றுக் கொள்ளாது நான் அதில் இணைந்து கொண்டமைக்கான காரணம் எமது அரசியல்தலைவர்கள் வழங்கிய முன்மாதிரியை அடிப்படையாகக்கொண்டாகும். முஸ்லிம் மக்களை வட பகுதியிலிருந்து விரட்டியடித்து, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்களைக் கொலை செய்து, ஹஜ் பயணிகளை காணாமலாக்கி, முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்து மிகக்கொடிய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட புலிப் பயங்கரவாதிகளுடன் அதாவது இரத்தகறை படிந்த கைகளுடன் கூடிய புலிகளுடன் கைகுலுக்கி, முஸ்லிம் சமூகத்தின் நெருக்கடிகள் பற்றி முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடாத்திய போன்றும் அவர்களுடன் பிற்காலத்தில் ஒரே அமைச்சரவையில் அமர்ந்து முஸ்லிம் தலைவர்கள் செயற்பட்டதைப் போன்றும், முன் கூறிய புலிகள் முதலமைச்சராக இருந்த போது முஸ்லிம் தலைவர்கள் நடந்துகொண்டதைப் போன்றும், நானும் இந்த செயலணியில் அமர்ந்து கொண்டதன் நோக்கம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்கான யோசனைகளை வழங்குவதற்காகவே அன்றி அவற்றை இரத்துச் செய்து காட்டிக்கொடுப்பதாற்காக அல்ல. “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளிலுள்ள அடிப்படை அம்சம்கள் வெளிநாட்டு சக்திகளின் தேவைக்காக அறிந்தோ அறியாமலோ வெளியிடப்படும் அறிக்கையாகவே நான் கருதுகிறேன். அதனைப் போன்றே முஸ்லிம் மக்களும் கருதுவார்கள் என்று நான் எண்ணுகிறேன்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை இரத்துச்செய்வதற்காக “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி மேற்குலகின் கருத்தை உதாரணமாகக் கருதி அதே கருத்தைக் கொண்டிருந்த போதும், ஆடைகள் தொடர்பில் மேற்குலகை மேற்கொள் காட்டிருப்பதையும், அதேபோன்று ஓரினச் சேர்க்கைக்கான சுதந்திரம் தொடர்பான கருத்து மற்றும் எல்ரிரிஈ சிறைக்கைதிகளை விடுதலை செய்தல் தொடர்பான கருத்தும் மற்றும் இறுதியாக எனது “ශ්රි ලංකා” என்ற பெயர் தொடர்பான யோசனை என்பன கவனத்தில் கொள்ளப்படாமை என்பனவை குறிப்பிடலாம்.
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது அனைவருக்கும் ஒன்றாகவும் மற்றும் பொதுவானதாகவும் இருக்க வேண்டுமே அன்றி அது பன்முகத்தன்மைகொண்ட இலங்கை மக்களின் உரிமைகளையும் மரபுகளையும் இரத்துச் செய்வதாக அமையக்கூடாது. அவ்வாறாயின் தற்போது இலங்கையின் தேசியக்கொடியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இனங்களைப் பிரதிபலிக்கும் நிறங்களை இல்லாதொழித்து ஒரே வர்ணத்தை முன்மொழிகின்றமை “ஒரே நாடு ஒரே சட்டமாக” அமையாதென்பதோடு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பதும் அவ்வாறு அமைய கூடாது. ஆதலால், “ஒரே நாடு ஒரே சட்டம்” குறைந்த பட்சம் பாராளுமன்றத்தின் சமர்ப்பிக்கப்படடு கிடப்பிலுள்ள சம உரிமை சட்டத்தில் அடங்கியுள்ள நியாயமான விடயங்கள் மீது கவனம் செலுத்தி “ஒரே நாடு ஒரே சட்டத்தை” ஏற்படுத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன்.
இறுதியாக நான் கூறவருவது என்னவென்றால் இலங்கையின் பூகோள அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு தானிய விதைகளை வீழ்த்தி எமது நாட்டை மாகாணங்களால் பிளவுபடுத்தி பரிவினைவாத யுத்தத்தை அன்றைய வெளிநாட்டு சக்திகள் ஏற்படுத்தியிருந்தன. இந்த யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாம் மற்றுமொரு வெளிநாட்டு சக்தியுடன் அதிகமாக நெருங்க ஆரம்பித்தோம். நாம் அவ்வாறு நெருங்கியதை நாட்டில் யுத்தத்திற்கு மறைமுகமான முறையில் வழிவகுத்த வெளிநாட்டு பகைமை சக்திகள்விரும்பவில்லை. அதன் ஒரு விளைவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் என்பதைக் குறிப்பிட முடியும். எமது நாட்டில் உள்ள மற்றுமொரு நாட்டுக்குச் சொந்தமான இடத்தின் மீது இரண்டு தாக்குதல்கள் ஒரே இடத்தில் நடாத்தப்பட்டமையும், நாட்டில் உள்ள மற்றுமொரு நாட்டுக்குச் சொந்தமான இடத்தின் மீதான தாக்குதல் செயலிழக்க செய்யப்பட்டமை என்பனவையும் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று சதாம் ஹுசைனுக்கு எதிராக ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி போலி அறிக்கையின் மூலம் ஈராக்கை அழிப்பதற்கு உரிய அறிக்கையைப் பயன்படுத்தினார்களோ அதேபோன்று எந்தவித அடிப்படையும் இன்றி கோவிட் சடலங்களை எரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்கிய சில புத்திஜீவிப் போராட்டக்காரர்கள் பரிந்துறை செய்தது என்பது அன்றைய ஈராக் புத்திஜீகளும் செய்த போராடங்கள் போன்று சதி என்பதை எமக்கு எமது எதிர்காலம் பாடமாக எடுத்துக்காட்டும்.
அதேபோன்று, மேதகு ஜனாதிபதி அவர்களே, முஸ்லிம் சமூகத்தின் தனியார் சட்டம், ஆடை, ஹலால் மற்றும் கோவிட் சடலங்ளை எரித்தமை மற்றும் அதனை நல்லடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமை போன்ற சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சில சமய மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் இன்று
போராட்டக்களத்திலிருந்து சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றி கருத்து வெளியிட்டாலும் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பரப்பிய வெறுப்புப் பிரசாரத்தினால் பிற்காலத்தில் இன மற்றும் மதங்களுக்கிடையில் பேதங்கள் உருவானது என்பதை ஒரு போதும் மறக்க முடியாது. இவர்கள் அன்று அறிந்தோ அறியாமலோ வெளிநாட்டு சக்திகளின் தேவைக்காகவே செயற்பட்டுள்ளார்கள். இதானல் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியும் அதைத் தான் செய்கிறதா என்பதே எமது கேள்வியாகும் ? இதனால், “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயணி முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் மற்றும் பாரம்பரியங்கள் மீது அறிந்தே அறியாமலோ கைவைப்பதன் மூலம் வெளிநாட்டு சக்திகளில் தேவைகளை நிறைவேற்றும் வகையில் எதிர்தரப்பு சக்திகளுக்கு அதற்குரிய வாய்ப்புக்களை ஏற்படுத்தி உரிமைகளை பறிப்பதற்காகவும். மீட்பதற்காகவும் அதனைத் தடுப்பதற்காகவும் இரண்டு குழுக்களைத் தூண்டிவிடும், மோதவிடும் நிகழ்ச்சி நிரலுக்கு செயலணியே அடிப்படைவாதிகளுக்கு பாதைகளை திறந்து கொடுப்பதா ?
முஸ்லிம சமூகம் என்பது சுதந்திரத்தின் போது தமிழ் தலைவர்களின் 50க்கு 50 என்ற பிரிவினைவாதக் கோரிக்கைக்காகவோ, பிரிவினைவாத ஈழ புலிகளுக்காகவோ முன்நிற்காத சமூகம் என்பதோடு, அவர்கள் அடிக்கடி கூறியது ஒற்றையாட்சி இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வதே அவர்களின் எதிர்பார்பாக இருந்தது. இதனால் அன்று காலனித்துவ வாதிகளால் முடியாமல் போன எம்மைப் பிரித்தாளும் முறைமையை “ஒரே நாடு ஒரே சட்டத்தின்” மூலம் நிறைவேற்றாது இலங்கை மக்களை “ஒரே கொடி, ஒரே தேசம், ஒரே நாடு, ஒரே சட்டத்தின்” கீழ் அனைத்து மக்களினதும் உரிமைகளையும் பாரம்பரியங்களையும் இரத்துச்செய்யாது பாதுகாப்பதே நாம் செய்ய வேண்டியதாகும். உங்களுக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி சகல விதமான அடிப்படைவாதங்களையும் புத்தபெருமான் கால்பதித்த இந்த நாட்டிலிருந்து முற்றாக அழித்து விடுமாறும், அதேபோன்று தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குத் தவறான ஆலோசனை வழங்கியவர்களும் நான் மேலே குறிப்பிட்டவாறு பூகோள அரசியல் சார்ந்த விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றவகையில் செயற்பட்டவர்களா, என்பதைக் கண்டறியுமாறும், இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புமாறும் நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.