இன்று (02) கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் போராட்டத்தின் போது, பல வீதிகளிற்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நிராகரித்துள்ளார்.
அமைதியான போராட்டத்தை நிறுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை, ஆனால் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் நடந்து கொண்டால் போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கைது செய்ய வேண்டும் என்று கூறி அந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக உள்ள தாமரைத் தடாக அரங்கிற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிசார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கொழும்பு கறுவாத்தோட்டம், சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர மாவத்தை, மல் வீதி, தாமரைத்தடாக சுற்றுவட்டம் உள்ளிட்ட பல வீதிகளுக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.