எரிவாயு கோரி போராடுபவர்கள் வீதியை மறித்து போராடுவதால் பலனில்லை. மாவட்டத்திலுள்ள அரச தரப்பு அரசியல்வாதிகளின் வீடுகளையும், அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராடுங்கள் என மட்டக்களப்பில் எரிவாயு கோரி போராடிய மக்களிற்கு ஆலோசனை கூறியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசபுத்திரன்.
எரிவாயு கோரி மட்டக்களப்பு, பயனியர் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதியை மறித்து மக்கள் போராடுவதை பொலிசார் தடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம், இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மத்தியில் உரையாற்றிய கோவிந்தன் கருணாகரம்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் இராஜாங்க அமைச்சு பதவிக்காக காத்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்தை ஒழுங்கமைக்க, மக்களிற்கு தேவையானவற்றை பேசி பெற்றுத்தரும் நிலையில் இல்லை. விநியோகிக்கப்படும் எரிவாயுவில் 60 வீதத்தை கொழும்பு, கம்பஹாவிற்கு அனுப்புவது முறையற்ற தீர்மானம் என்றார்.
இராசபுத்திரன் சாணக்கியன் உரையாற்றிய போது,
விநியோகிக்கப்படும் எரிவாயுவில் 60 வீதம் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படுகிறது. அங்குள்ள மக்கள் போராடி, அரசியல்வாதிகளின் வீடுகளை எரித்தமையினாலேயே அப்படியான பிரச்சனை வரக்கூடாதென்பதற்காக அங்கு அதிகமான எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிற்கு எரிவாயு தேவையெனில் அது உங்களின் கைகளிலேயே உள்ளது.
எரிவாயுவிற்காக வீதியை மறித்து போராடுவதால் பலனில்லை. அதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எரிவாயுவை வரவைக்க மாவட்ட செயலகத்தையும், ஆளுந்தரப்பு பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், வியாழேந்திரனின் வீடு, பிள்ளையானின் அலுவலகம், வீட்டை முற்றுகையிட வேண்டும்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபரை தொலைபேசியில் அழைத்தேன். அவர் பதிலளிக்கவில்லை. பிள்ளையானின் அழைப்பிற்கு மட்டும்தான் பதிலளிப்பார் என்றார்.
வியாழேந்திரன், பிள்ளையானின் வீடு அலுவலகங்களை முற்றுகையிடும்படி பொதுமக்களிடம் சாணக்கியன் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
,இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சாணக்கியனின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தினார். மக்களிற்கு ஏதாவது முடிவு சொல்லும்படி சாணக்கியன் குறிப்பிட்டார்.
பின்னர் கோவிந்தன் கருணாகரம் மாவட்ட செயலாளருடன் உரையாடினார். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிலிண்டர்களை பெற்று இங்குள்ள மக்களிற்கு வழங்கும்படி வலியுறுத்தினார்.
இதையடுத்து, அங்கு வழங்கப்பட்ட 250 ரோக்கன்களிற்கும் நாளை எரிவாயு சிலிண்டர் விநியோகிப்பதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.