பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட ஓரேபாலின இணையான இரண்டு யுவதிகள் ஒன்றாக வாழலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆலுவாவை சேர்ந்த ஆதிலா நஸ்ரின் என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் நீதிமன்றம் இந்த உத்தரவை அறிவித்துள்ளது.
அவரது மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இருவரும் வயது வந்தவர்கள் என்பதால், ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆதிலா நஸ்ரின் சவூதி அரேபியாவில் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது பாத்தமா நூராவை சந்தித்தார். அவர்கள் இருவரும் லெஸ்பியன்கள் என்பதை உணர்ந்த பிறகு மற்றவர்களைப் போலவே தொடங்கிய அவர்களின் நட்பு மேலும் தீவிரமாகி காதலாக வழிவகுத்தது. இவர்களது பெற்றோர் நண்பர்கள் என்பதால் ஆதிலாவையும் நூராவையும் கோழிக்கோட்டில் உள்ள ஒரே கல்லூரியில் உயர்கல்வி படிக்க அனுப்ப முடிவு செய்தனர். இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிக்க விரும்புவதாகவும், பட்டப்படிப்பை முடித்த பிறகு தங்கள் குடும்பங்களில் விஷயத்தை சமாதானப்படுத்த திட்டமிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர்களது உறவினர்கள் இந்த உறவுக்கு தடை விதித்தனர். இருவரும் சேர்ந்து வாழ முயன்றபோது, வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டதாக, ஆதிலா நஸ்ரின் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பினானிபுரம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆதிலா அறைக்கு வரவழைக்கப்பட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி வினோத் சந்திரன் ஓரின சேர்க்கையாளர்களான பெண்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியவர்கள். எனவே இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்கலாம் என உத்தரவிட்டார்.
பின்னணி
ஆதிலா நஸ்ரின் (22), பாத்திமா நூரா (23) நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். இந்த பழக்கம் ஓரின சேர்ச்சையாக மாறியது. இவர்களின் தொடர்பு இருவரின் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்களது விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்ததும், அவர்களை ஒரே கல்லூரிக்கு அனுப்பும் முடிவில் இருந்து பின்வாங்கினர். தங்கள் காதல் நீடிக்காது என்று பெற்றோர் நினைத்ததாக ஆதிலா கூறுகிறார். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரித்தபோதும் சமூக ஊடகங்களில் இணைந்திருந்தனர். கேரளாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், அவர்கள் மீண்டும் சந்தித்தனர். மே 19 அன்று தங்கள் குடும்பங்களை விட்டு, வெளியேறி ஒன்றாக வாழ புறப்பட்டனர். மூன்றாம் பாலின சமூகங்களுக்கு உதவும் கோழிக்கோடு வனஜா கலெக்டிவ் நிறுவனத்தில் தஞ்சம் புகுந்தனர். அதே இரவில், இரண்டு யுவதிகளின் பெற்றோர்களும் அங்கு வந்து, தமது மகள்களை அழைத்துச் செல்ல முயன்றனர்.
எனினும், பெற்றோருடன் செல்வதற்கு நூரா மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஆதிலாவின் பெற்றோர் வித்தியாசமாக விவகாரத்தை அணுகிறார். தமது மகள் ஆதிலாவையும், நூராவையும் தமது வீட்டுக்கே வருமாறும், நூராவையும் தங்கள் சொந்த மகளைப் போல பார்த்துக் கொள்வதாகவும் அவர்கள் வனஜா கலெக்டிவ் நிறுவனத்திற்கு உறுதியளித்தனர். இதையடுத்து, வனஜா கலெக்டிவ் நிறுவனத்தினரும் அவர்களை அழைத்துச் செல்ல அனுமதியளித்தனர்.
ஆனால் ஆதிலாவும் நூராவும் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டவுடன், குடும்பத்தினர் இரண்டு யுவதிகளுக்கும் உணர்ச்சிவசப்பட்ட அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு யுவதிகளும் நெருங்கி பழகுவார்கள் என்று குடும்பத்தினர் பயந்ததால் அவர்கள் தூங்கவே அனுமதிக்கப்படவில்லை என்று ஆதிலா குற்றம் சாட்டினார்.
மே 23 அன்று, நூராவைக் காணவில்லை என்று கோழிக்கோடு தாமரசேரி காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
மே 24 அன்று, நூராவின் பெற்றோரின் புகாரின் அடிப்படையில் ஆலுவாவில் உள்ள பினானிபுரம் காவல் நிலையம் அந்த யுவதிகளிற்கு அழைப்பாணை அனுப்பியது. ஆனால், இரு பெண்களும் வயதுக்கு வந்தவர்கள் என்பதை உணர்ந்த பினானிபுரம் இன்ஸ்பெக்டர், பெற்றோரின் பொய்ப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து, இரண்டு யுவதிகளும் ஆதிலாவின் உறவினர் வீட்டுக்குத் திரும்பினர்.
அந்த வீட்டிற்கு, நூராவின் குடும்பத்தினர் வந்தனர். அவரது தாய், தாத்தா, பாட்டி மற்றும் அத்தை உள்ளிட்டவர்கள் நூராவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவிலிருந்து கேரளாவுக்குத் திரும்பிய ஆதிலாவின் தந்தை, நூராவின் குடும்பத்தினர் மகளை இழுத்துச் சென்றபோது, உடல் ரீதியாக ஆதிலாவைக் கட்டுப்படுத்தினார்.
இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே வனஜா கலெக்டிவ் தகவல் அறிந்து, ஆதிலாவின் உறவினர் வீட்டுக்கு வந்ததுடன், பினானிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நூராவை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். போலீசார் ஆதிலாவை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
நூரா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு சாட்சியான ஆதிலாவின் தோழி தன்யா, நூரா உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் பயப்படுவதாக கூறினார்.
“ஒரு ஆண் மூலம் இன்பத்தை உணர்ந்தவுடன் இது தானாக மாறும் என்று நூராவின் அத்தை கூறியதை கேட்டேன்’ என தன்யா கூறினார்.
மே 27 அன்று, வனஜா கலெக்டிவ் மற்றும் ஆதிலா ஆகியோர் நூராவின் குடும்பத்தினருக்கு எதிராக புகார் அளிக்க கோழிக்கோடு தாமரசேரி காவல்துறையை அணுகினர். ஆனால் இது குடும்ப விவகாரம் என்று கூறி எஃப்ஐஆர் பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். அத்துடன், தம்மால் தலையிட முடியாது என்றும் கைவிரித்து விட்டனர்.
மே 29 அன்று, ஆதிலா நூராவுடன் தொலைபேசியில் பேச முடிந்தது.
நூரா பாலுணர்வு மாற்று சிகிச்சையில் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று ஆதிலா கூறினார்.
தொலைபேசியில் பேசியபோது அலி என்ற ஆலோசகர் மற்றும் அவரது தாயார் முன்னிலையில் நூரா இருந்தார் என தெரிவித்தார்.
“அலி எங்கே வேலை செய்கிறார் என்று நான் கேட்டபோது, அவர் சரியான விவரங்களை வெளியிடவில்லை, அவர் “நான் பல இடங்களில் வேலை செய்கிறேன்” என்று கூறினார். நூரா தனது தாயிடம் மிகவும் முரட்டுத்தனமாக பேசியதை நான் கேள்விப்பட்டதில்லை, ஆனால் அன்று நான் கேட்டேன்.
நூரா தன் அம்மாவிடம், ‘நீ என்னை மேலும் தொந்தரவு செய்தால், நீ என்ன செய்தாய் என்று அவளிடம் கூறுவேன்’ என்று கூறிக்கொண்டிருந்தாள். கவுன்சிலிங் பற்றி பேசுகையில், நூரா என்னிடம் அவள் எங்கே இருக்கிறாள் என்று ‘புரிகிறதா’ என்று கேட்டாள். அவள் எனக்கு போதுமான குறிப்புகளை அனுப்பினாள்.
அவள் எனக்கு போதுமான குறிப்புகளை அனுப்பினாள். அவள் என்னிடம் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் ஆனால் அழைப்பு ஸ்பீக்கரில் இருந்தது. நான் மீண்டும் நூராவிடம் பேச வேண்டுமானால், பல இடங்களில் அனுமதி பெற வேண்டும் என்று ஆலோசகர் என்னிடம் கூறினார்,” என்று ஆதிலா கூறினார்.
மாற்று சிகிச்சை என்பது ஒரு நபரின் பாலியல் நோக்குநிலை அல்லது பாலினத்தை ‘மாற்றும்’ ஒரு விஞ்ஞானமற்ற செயல்முறையாகும். இந்த நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மே 30 அன்று, ஆதிலா கேரள உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்த பிறகு, நூரா கேரள உயர்நீதிமன்றத்திற்கு வந்தார்.
இந்த நடவடிக்கையில் தம்பதிகளைத் தவிர வேறு யாரையும் ஆஜராக நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
“ஒரு ஐந்து முதல் ஆறு நிமிட நீதிமன்ற நடவடிக்கையில், ஆதிலாவும் நூராவும் ஒன்றாக வாழ விரும்புகிறீர்களா என்று நீதிமன்றத்தால் கேட்கப்பட்டது, அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர்” என்று தன்யா கூறினார்.