நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான வன்முறைகளை கண்டித்து திருகோணமலையில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
“அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் சிறுமியர் மற்றும் பெண்களை பாதுகாப்பும்” எனும் தொனிப்பொருளில் வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த குறித்த அமைதி ஆர்ப்பாட்டம் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இன்று (31) இடம்பெற்றது.
குறித்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் இது நீதிக்கான போராட்டம்,பச்சிளம் குழந்தைகளுக்கு ஏன் வன்கொடுமை, சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பை வழங்குங்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்தை நிறுத்து போன்ற பதாதைகளை ஏந்தியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
மேலும் அன்று யாழ்ப்பாணத்தில் விந்தியாவுக்கு ஏற்பட்ட துயர நிலைக்கு காரணமான கொடிய மிருகங்களுக்கு சரியான தண்டனை அன்று வழங்கியிருந்தால் நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா மற்றும் நேற்றைய தினம் வவுனியா கணேசபுரத்தில் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 16 வயதான சிறுமி யதுசி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட அனைவரையும் காப்பாற்றி இருக்கலாம் எனவும் நாட்டில் பெண்களுக்கான வன்கொடுமைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாமையினால் நாளுக்கு நாள் இவ்வாறு சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகவும் இதன்போது குற்றம் சுமத்தினர்
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குறுகிய காலத்தின் பின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதரவுடன் சந்தோசமாக உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சுற்றி திரிவதை நாம் கண் முன்னே கண்டு கொண்டிருக்கின்றோம்
எனவே அட்டுலுகம மற்றும் வவுனியா பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிகளுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டுமானால் சந்தேக நபராக இனங்காணப்பட்ட குறித்த கொடிய மிருகத்திற்கு பொதுமக்களினால் தக்க தண்டனை வழங்க வேண்டும் எனவும் இதன் பின்னர் சிறுமிகளை துன்புறுத்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்
பெண்களுக்கு எதிரான மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகளை உரிய முறையில் விசாரித்து அவர்களுக்கான தண்டனை வழங்க வேண்டுமென சட்டத்தரணியும் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்தினி உதயகுமார் அவர்களின் தலைமையில் திருகோணமலையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது
மேலும் குறித்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம்,திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


–ரவ்பீக் பாயிஸ் –