அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் என சட்டத்தரணி கனிஷ்க விதாரண உயர் நீதிமன்றத்தில் இன்று (30) தெரிவித்துள்ளார்.
உத்தேச 21வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இதனைத் தெரிவித்தார்.
குணதாச அமரசேகர, தேசிய கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் லெப்டினன்ட் கேணல் அனில் அமரசேகர மற்றும் ஐக்கிய இலங்கை பொதுச் சபையின் செயலாளர் ஜயந்த குலதுங்க உள்ளிட்டவர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் இன்று (30) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருக்காக சட்டத்தரணி நுவான் பெல்லன்துடாவ சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, உத்தேச சட்டமூலத்தின் 4 ஆம் பந்தியின் கீழ் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படும் உரிமை நிறைவேற்று ஜனாதிபதிக்கு இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். .
இந்த மசோதாவின் பத்தி 7ன் படி, பிரதமர் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதிகாரப்பகிர்வு கோட்பாடு மீறப்படுவதாகவும் இதனை நிறைவேற்றினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் எனவும் சட்டத்தரணி தெரிவித்தார்.