வட கொரியாமேற்கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளிற்கு பதிலடியாக கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு சபையில் ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளன.
2006 இல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வடகொரியா மீது தடைகள் விதிக்க தொடங்கியதிலிருந்து, சபை பகிரங்கமாக பிளவுபடுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தென்கொரியாவில் இருந்து புறப்பட்ட பிறகு, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்தது.
இதனையடுத்து, வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கும் முயற்சியை அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தொடராக புகைப்பிடிப்பவர் என்பதால், வட கொரியாவிற்கு புகையிலை மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை தடை செய்தது.
பாதுகாப்பு சபையின் 13 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற போதிலும், தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவின் வீட்டோ அதிகாரத்தால் இரத்து செய்யப்பட்டது.
இந்த வாக்கெடுப்பை “ஏமாற்றம் தரும் நாள்” என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் விவரித்தார்.
ரஷ்யாவின் ஐ.நாவிற்கான தூதர் வசிலி நெபென்சியா, “வட கொரியாக்கு எதிரான புதிய தடைகளை அறிமுகப்படுத்துவது முட்டுச்சந்திற்கு செல்வதற்கான பாதை.” என்றார்.
“வ்கொரியாவின் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் வலுப்படுத்துவதன் பயனற்ற தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.” என்றார்.
சீனாவின் ஐ.நா தூதர் ஜாங் ஜுன் கருத்துப்படி, “கொரிய தீபகற்பத்தின் நிலைமை இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளமைக்கு, முதன்மையாக அமெரிக்கக் கொள்கைகள் மற்றும் முந்தைய உரையாடல்களின் முடிவுகளை நிலைநிறுத்தத் தவறியமையே காரணம்.” என்றார்.
உக்ரைனின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் பகைத்துக் கொண்ட பின்னணியில், பின்னர், ரஷ்யாவும் வட கொரியாவும் இராஜதந்திரரீதியில் இணக்கமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. சீனா பல தசாப்தங்களாக வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறது.



