மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினத்தவர் நலத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் சட்ட விரோதப் பண பரிவர்த்தனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
காலித் உஸ்மான் ஷேக் என்பவரின் சகோதரர், தாவூத் சகோதரர் இக்பால் கஸ்கருடன் சிறுவயது முதலே நண்பராக இருந்துள்ளார். மும்பையில் நடந்த ஒரு கோஷ்டி மோதலில் அவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், காலித் உஸ்மான் ஷேக்கிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது காலித் கூறியதாவது:
தாவூத் மும்பையில்தான் தங்கியிருக்கிறார். அவர் தனது சகோதரர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 லட்சம் அனுப்புகிறார் என்று தாவூத்தின் சகோதரர் இக்பால் கஸ்கர் என்னிடம் கூறியிருக்கிறார். அந்தப் பணத்தை தாவூத்தின் ஆட்கள் மாதந்தோறும் கொண்டுவந்து தருவதாக கஸ்கர் கூறினார்.
தாவூத்தின் சகோதரி ஹசீனா பார்க்கர், அவரது கார் ஓட்டுநர் சலீம் படேலையும் எனக்கு தெரியும். இவர்கள் இருவரும் தாவூத் பெயரை சொல்லி கோவாவைச் சேர்ந்தவருக்கு மும்பை குர்லா பகுதியில் உள்ள சொத்தை அபகரித்துள்ளனர். பின்னர் அந்த நிலத்தை நவாப் மாலிக் குடும்பத்தினருக்கு குறைந்த விலைக்கு விற்றதாக கார் ஓட்டுநர் சலீம் படேல் என்னிடம் கூறினார். இவ்வாறு காலித் உஸ்மான் ஷேக் கூறியுள்ளார்.