பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோரின் சதத்தினால் இலங்கை வலுவான நிலையை அடைந்துள்ளது.
இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 426 ஓட்டங்களை (148 ஓவர்கள்) பெற்றுள்ளது.
மத்யூஸ் இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். 294 பந்துகளை சந்தித்து 105 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார். இது அவரது 13வது டெஸ்ட் சதம்.
மத்யூஸ் சதம் அடித்த சில நிமிடங்களில் தினேஷ் சந்திமலும், சதம் அடித்தார். 183 பந்துகளில் 102 ஓட்டங்களுடன் ஆடி வருகிறார்.
மிர்பூரில் நடக்கும் இந்த டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதால், இன்று 30 நிமிடங்கள் முன்னதாகவே ஆரம்பித்தது.
மிர்பூர் ஆடுகளம் இன்றும் துடுப்பாட்டக்காரர்களிற்கு சாதகமாகவே காணப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர்களிற்கு ஆடுகளம் சிறிதும் ஒத்துழைக்காத நிலையில், பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர்கள், ஷகிப் அல் ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் மட்டும் ஓட்டங்களை கட்டுப்படுத்தி பந்து வீசி வருகிறார்கள்.
எனினும், தெளிவான விக்கெட் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. வலுவான இரண்டு முறையீடுகளை மட்டும் செய்தனர். எனினும், நடுவர்கள் அவற்றை நிராகரித்தனர்.
மத்யூஸ் – சந்திமல் ஜோடி 6வது விக்கெட் இணைப்பாட்டமாக 160 ஓட்டங்களை பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக ஆடிய பங்களாதேஷ் அணி 365 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.
இலங்கை அணி 61 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இன்றைய 4ஆம் நாளில் இன்னும் 45 ஓவர்கள் மீதமுள்ளது.